×

கெடார் அருகே இறப்பு சான்றிதழ் வழங்க ₹1,000 லஞ்சம் வாங்கிய அரியலூர் திருக்கை பெண் விஏஓ அதிரடி கைது

*லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை *வீடியோ வைரலானதால் பரபரப்பு

கண்டாச்சிபுரம் : விழுப்புரம் அருகே இறப்பு சான்றிதழ் வழங்க ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓவை விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா கெடார் அடுத்த அரியலூர் திருக்கை விஏஓ விழுப்புரத்தை சேர்ந்த சங்கீதா (41). திருக்கை அருகே நகர் கிராமத்தை சேர்ந்த அருளாந்து மனைவி அன்னம்மாள் என்பவரின் மாமனார் மாணிக்கம், அவரது கணவரின் அண்ணன் சவுரிமுத்து ஆகிய இருவரும் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். அப்போது விபரம் தெரியாததால் இறப்பு சான்றிதழ் பதிவு செய்ய தவறிவிட்டார்.

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருவருக்கும் இறப்பு சான்றிதழ் கேட்டு தனித்தனியே விழுப்புரம் கோட்டாட்சியரிடம் மனுக்கள் கொடுத்துள்ளார். அரியலூர் கிராம நிர்வாக அலுவலர் சங்கீதாவை நேரில் சந்தித்து இறப்பு சான்றிதழ் சம்பந்தமாக ஆன்லைனில் பதிவு செய்ய அன்னம்மாள் கேட்டுள்ளார். அப்போது அன்னம்மாளிடம் மனு கொடுத்து கண்டுகொள்ளாமல் விட்டால் எப்படி, ஆன்லைனில் பதிவு செய்வது நான் தான் என்றும் ஆன்லைனின் பதிவு செய்ய தலா 500 வீதம் இருவருக்கும் ரூ.1,000 லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் தர விருப்பமில்லாததால் அன்னம்மாள், விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பால்சுதர் தலைமையிலான போலீசார் ரசாயனம் தடவிய ரூ.1,000 பணத்தை அன்னம்மாளிடம் கொடுத்து விஏஓவிடம் கொடுக்கும் படி கூறியுள்ளனர். இதையடுத்து நேற்று மதியம் அன்னம்மாள் விஏஓவிடம் ரசாயனம் தடவிய பணத்தை லஞ்சமாக கொடுத்தபோது விஏஓ அதனை பெற்றதும் அங்கு மறைந்திருந்த லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக விஏஓ சங்கீதாவை பிடித்து கைது செய்தனர். மேலும் அவரை விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

கெடார் அடுத்த அரியலூர் திருக்கை வருவாய் கிராமத்தில் பெண் விஏஓ சங்கீதா லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று அப்பகுதி இளைஞர்களால் சமூகவலைத்தளம் முழுவதும் அதே பெண் விஏஓ கடந்த சில மாதங்களுக்கு முன்பு லஞ்சம் வாங்குவது போல் வீடியோ வைரலானது. அதில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் ஏரியில் மண் எடுப்பதற்கு ரூ.5,000 லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ நேற்று வைரலாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கெடார் அருகே இறப்பு சான்றிதழ் வழங்க ₹1,000 லஞ்சம் வாங்கிய அரியலூர் திருக்கை பெண் விஏஓ அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Ariyalur Thirukam ,Kedar ,Ariyalur ,Thirukkh ,VAO ,
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...