×

அல்லேரி மலை வனப்பகுதியில் 5 கி.மீ. தூரம் சாலை அமைப்பதற்காக சத்துவாச்சாரியில் இருமடங்காக 6 ஹெக்டேர் வருவாய் நிலம் வனத்துறையிடம் ஒப்படைப்பு

*அதிகாரிகள் முன்னிலையில் அளவிடும் பணிகள் தொடங்கியது

வேலூர் : அல்லேரி மலை வனப்பகுதியில் 5 கி.மீ. தூரம் சாலை அமைப்பதற்கான இடத்துக்கு பதில் இரு மடங்காக சத்துவாச்சாரியில் 6 ஹெக்டேர் வருவாய் நிலம் வனத்துறைக்கு ஒப்படைப்பதற்காக அதிகாரிகள் முன்னிலையில் நிலம் அளவிடும் பணி நேற்று தொடங்கியது.வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலைப்பகுதியில் கடந்த மே மாதம் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை பாம்பு ஒன்று கடித்தது. போதிய சாலை வசதி இல்லாத காரணத்தால் குழந்தையை அதன் பெற்றோர் தோளில் சுமந்துகொண்டு நடந்தே மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாததால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அல்லேரி மலைப்பகுதிக்கு சாலை அமைப்பதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் விரைவுபடுத்தியது. ஊரக வளர்ச்சி துறை சார்பில் சாலை அமைக்கப்பட உள்ள இடங்கள் அளவீடு செய்யப்பட்டது. பின்னர் அது ஒன்றிய அரசின் பர்வேஸ் போர்ட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. தற்போது ஒன்றிய அரசின் அனுமதிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் 5 கிலோ மீட்டர் தூரம் அதாவது 3 ஹெக்டேர் அளவுக்கு சாலை அமைக்க வேண்டி உள்ளது. அதற்கு மாற்றாக வருவாய்துறை சார்பில் வனத்துறைக்கு இரண்டு மடங்கு அதாவது 6 ஹெக்டேர் நிலம் வழங்க வேண்டி உள்ளது. இதற்காக வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள காகிதப்பட்டறை மலையடிவாரத்தில் உள்ள வருவாய்த்துறைக்கு சொந்தமான மலை புறம்போக்கு நிலத்தில் 6 ஹெக்ேடர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்காக நேற்று முன்தினம் ஆர்டிஓ கவிதா, தாசில்தார் செந்தில் மற்றும் வனத்துறை அதிகாரிகள் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். இந்நிலையில் வேலூர் நில அளவை துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேற்று சத்துவாச்சாரி மலை பகுதியில் டிஜிபிஎஸ் முறையில் நிலம் அளவிடும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:

அல்லேரி மலைக்கு சாலை அமைக்கப்பட உள்ளதால் வனத்துறைக்கு சொந்தமான 3 ஹெக்ேடர் நிலம் பயன்படுத்தப்பட உள்ளது. அதற்கு பதிலாக வனத்துறைக்கு வருவாய்த்துறை சார்பில் இருமடங்காக 6 ஹெக்ேடருக்கான நிலத்தை வழங்க வேண்டும் என்பது விதி. அதன்படி சத்துவாச்சாரி மலைப்பகுதியில் இருந்து காகிதப்பட்டரை வரை உள்ள வருவாய்த்துறைக்கு சொந்தமான மலைபுறம்போக்கு இடத்தை அளவீடு செய்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளது.

அப்பகுதியில் வனத்துறைக்கு என்று வழங்கப்பட்டுள்ள அளவீடு கற்களை கொண்டு அளவீடு செய்யப்படுகிறது. மேலும் வரைபடங்களை கொண்டு முதலில் இடத்தை அடையாளம் காணப்படுகிறது. அதன்பிறகே டிஜிபிஎஸ் முறையில் அளவீடு செய்யப்படுகிறது. இந்த பணி 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை நடக்க உள்ளது. அதன்பிறகு வனத்துறையிடம் அந்த இடம் ஒப்படைக்கப்படும். பின்னர் அதற்கான ஆதாரங்களை ஒன்றிய அரசின் பர்வேஸ் போர்ட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதன்பிறகே ஒன்றிய அரசு சாலை அமைக்க தடையில்லா சான்றிதழ் வழங்கும். இதையடுத்து சாலை அமைக்கும் பணி தொடங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கைகாட்டி தப்பித்த வருவாய்த்துறை

சத்துவாச்சாரி முதல் சைதாப்பேட்டை வரை உள்ள மலைப்பகுதிகளில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மலையடிவாரத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். சிலர் வாடகைக்கு விட்டுள்ளனர். வீட்டின் மீது மலையில் இருந்து ராட்சத கற்கள் உருண்டு விழுந்து உயிரிழப்பு சம்பவத்துக்கு பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கைக்காக அந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற பஞ்சாயத்து நடந்தது.

அப்போது வருவாய்த்துறை அதிகாரிகள் இது எங்களுக்கு சொந்தமான இடம் கிடையாது என்று கூறி வனத்துறை மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமானது என்று அந்த துறைகளை கைகாட்டிவிட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கையை எடுக்காமல் தப்பித்துவிட்டது.

ஆனால் வனத்துறையும், மாநகராட்சியும் அந்த இடத்தை உரிமை கோர முன்வரவில்லை. தற்ேபாது அளவிடும் பணி நடைபெறுவதன் மூலம் வருவாய்த்துறைக்கு சொந்தமான மலை புறம்போக்கு இடம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே வனத்துறைக்கு இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வேறு துறைகளை கைகாட்டி வருவாய்த்துறை தப்பித்து இருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

The post அல்லேரி மலை வனப்பகுதியில் 5 கி.மீ. தூரம் சாலை அமைப்பதற்காக சத்துவாச்சாரியில் இருமடங்காக 6 ஹெக்டேர் வருவாய் நிலம் வனத்துறையிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Allerie ,cm ,Satuvachari ,Vellore ,Alleri Mountain Forest cm ,Allerie Mountain Wilderness ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...