×

ஏழை முதியவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை டாக்டர்களுக்கு குவியும் பாராட்டுகள் தனியாருக்கு நிகராக போளூர் அரசு மருத்துவமனையில்

போளூர், ஜூலை 25: தனியாருக்கு நிகராக போளூர் அரசு மருத்துவமனையில் ஏழை முதியவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். இதனால் சமூக ஆர்வலர்கள் பலர் மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சவால் மிக்க உயர்தர அறுவை சிகிச்சைகளை அரசு மருத்துவர்கள் சர்வ சாதாரணமாக செய்து வருகின்றனர். இது ஏழைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. சமீபத்தில் போளூரை சேர்ந்த 70 வயது முதியவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து போளூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரில் வசித்து வருபவர் பாகாஷ்(70). இவர் கடந்த சில ஆண்டுகளாகவே மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வசதி இல்லாததால் கடந்த வாரம் போளூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு முதியவர் பாகாஷை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வதுதான் ஒரே வழி என்று வலியுறுத்தினார்.

அத்துடன் தலைமை மருத்துவர் அலமேலுவின் ஆலோசனையின் படி முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் முதியவருக்கு இலவசமாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். அதன்படி அரசு மருத்துவமனையின் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விமல்ராஜ் தலைமையில் முதியவர் பாகாஷுக்கு கடந்த வாரம் அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஒரு வாரமாக டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்து முதியவருக்கு நேற்று முன்தினம் நடைபயிற்சி அளிக்கப்பட்டது. அவர் ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்த பிறகு டாக்டர்கள் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தேவைப்பட்ட ஏழை பெண் ஒருவருக்கு போளூர் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவரும் மகப்பேறு மருத்துவ நிபுணருமான டாக்டர் அலமேலு தலைமையிலான மருத்துவ குழுவினர் லேப்ராஸ்கோப் மூலம் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். இந்த இரண்டு அறுவை சிகிச்சைகளும் முதன்முறையாக போளூர் அரசு மருத்துவமனையில் செய்து முடிக்கப்பட்டது. இதற்கு காரணமான டாக்டர்களுக்கு சுகாதார பணிகள் இயக்குனர் பாபுஜி, குடும்ப நலத்துறை துணை இயக்குனர் அன்பரசி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து மருத்துவமனை அலுவலர் டாக்டர் அலமேலு கூறுகையில், ‘பெரிய மருத்துவமனைகளுக்கு சென்று லட்சக்கணக்கில் செலவு செய்தால் தான் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்ற நிலை இப்போது கிடையாது. திறமை வாய்ந்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருகின்றனர். அந்த வகையில் அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும், லேப்ராஸ்கோப் மூலம் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. எனவே ஏழை எளிய மக்கள் போளூர் அரசு மருத்துவமனையில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்’ என கூறினார்.

The post ஏழை முதியவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை டாக்டர்களுக்கு குவியும் பாராட்டுகள் தனியாருக்கு நிகராக போளூர் அரசு மருத்துவமனையில் appeared first on Dinakaran.

Tags : Polur Government Hospital ,Polur ,
× RELATED போளூரில் நெல் சாகுபடி அதிகரிப்பால்...