×

இலை கட்சி மாநாடு போகும் பெண்களின் பாதுகாப்பு பிரச்னையை எழுப்பியதால் அதிர்ந்து போன நிர்வாகிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தூங்கா நகர கூட்டத்துக்கு தனியாக வரும் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு என்று ஒரு பெண் கேள்வி குண்டை தூக்கிப் போட்டாராமே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகர மாவட்டத்தில் நடக்க இருக்கும் இலை கட்சி மாநாடு தொடர்பாக, தென்கோடியில் உள்ள மாவட்டம் ஒன்றில் இலை கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநாடுக்கு செல்வது தொடர்பாக பஸ், வேன், சாப்பாடு, பாதுகாப்பு, தங்கும் இடம் உள்ளிட்டவை குறித்து விவாதம் நடந்தது. இலை கட்சியின் கூட்டம் முடிந்ததும், மகளிரணி நிர்வாகியை நன்றி கூற அழைச்சாங்க. அவரும் மைக் பிடிப்பார் நன்றி என்ற ஒற்றை சொல்லுடன் மாநாடு தொடர்பான கூட்டத்தை முடித்து வைப்பார் என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நினைச்சாங்க. ஆனால், மைக் கிடைத்த சந்தோஷத்தில் அந்த மகளிரணி நிர்வாகி, எடுத்த எடுப்பிலேயே, மாநாட்டுக்கு செல்லும் பெண்கள் கண்ணியத்துடன் திரும்பி வர உத்தரவாதம் தர வேண்டும் என்று பெரிய வெடி குண்டை போட்டாராம். அவரின் பேச்சு கட்சியின் நிர்வாகிகளை அலற வைத்ததாம். அவர் பேசியதும், கூட்டத்தில் இருந்த ஒரு ஆண் நிர்வாகிகள், இந்த பெண் நிர்வாகி விஷயமாகத்தான் பேசறாங்க என்று கூறி பலமாக சிரித்தனர். அதற்கு பெண்கள் சிலர் எதிர்ப்பு தெரிவிக்க கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. நிலைமை வேறு விதமாக போய் விட கூடாது என்பதை உணர்ந்த, மேடையில் இருந்த முக்கிய நிர்வாகி, பெண்களை பத்திரமாக அழைத்து கொண்டு சென்றுவிட்டு, பத்திரமாக கூட்டிட்டு வரணும் என்பதை தான் அந்த பெண் நிர்வாகி கூறினார், மற்றபடி அவரின் பேச்சில் வேறு அர்த்தம் எதுவும் இல்லை என்று கூறி அப்போதைக்கு சமாளித்தாராம். இருந்தாலும் அந்த பெண் நிர்வாகி மேடையில் இருந்து இறங்கி வந்ததும், பெண்களுக்குள் கடுமையா வாக்குவாதம் உருவானதால் அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அல்வா மாவட்ட தலைநகரில் காக்கிகள் எதுக்காக கலங்கி இருக்காங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘அல்வா நகரில் இப்ப உளவு போலீசார் பலர் தங்கள் சொந்த பிரச்னைய கையில எடுத்துகிட்டு, அதற்கேற்ப கரன்சி வரும் பசை நபர்களுக்கு சப்போர்ட்டாகவும், மற்றவர்களை கண்டு கொள்வதில்லை என்ற பாலிசியோடு செயல்படறாங்களாம். மாநகர்ல ஜனநெருக்கடி அதிகமுள்ள ஏரியாவுல எந்த பிரச்னை நடந்தாலும், உளவு போலீசார் சில நேரங்கள்ல ‘ஆந்தை’ மாதிரி அடிக்கடி எதுவும் தெரியாம முழிக்கிறாங்களாம். இவை எல்லாம் ராஜ்ஜியத்தை கட்டியாளும் தலைமை அதிகாரி கவனத்துக்கு கொண்டு போனாங்களாம். சொந்த பிரச்னையில ஆதாயம் அடைந்தவுங்கள ஆயுதப்படைக்கு தூக்கி அடிச்சிட்டாராம் அந்த நேர்மையான அதிகாரி. எப்ப பார்த்தாலும் மண்ணு மாதிரி செயல்படற சில உளவுப் போலீசாரை அழைத்தாராம் இந்த ஊர்ல இருக்கணும்னா ஒழுங்கா வேலை செய்… இல்லை உங்களை எங்கே மாத்துவேன்னு எனக்கே தெரியாது என்று தனி அறையில் எச்சரிச்சி அனுப்பினாராம். இன்னும் சில சீக்ரெட் போலீஸ் அதிர்ச்சியில இருக்காங்களாம், காரணம் அவங்களுக்கும் சீக்கிரம் டிரான்ஸ்பர் காத்திக்கிட்டிருக்காம். இதனால நுண்ணறிவு பட்டாளம் பயத்துல சுத்துதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அதிகாரியை கண்டுக்காம தனக்கு துட்டு கேட்டு அடம் பிடிக்கும் அதிகாரி யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டத்துல தண்டத்துல தொடங்கி பட்டு என்று முடியுற ஊராட்சி ஒன்றியம் இருக்குது. இந்த ஒன்றியத்துல ஜூனியர் அசிஸ்டெண்டாக 3 எழுத்து பெயர் கொண்டவர் இருக்காராம். அந்த ஆபிஸ்ல இவர் வைச்சதுதான் சட்டமாம். உங்க பில் பாஸாக வேண்டுமானால் எனக்கு பர்சன்டேஜ் கொடுக்கணும். அப்போதுதான், உங்கள் பில் பாஸ் ஆகும். இல்லன்னா? ஆகாதுன்னு அடிச்சு சொல்றாராம். பலமுறை பிளாக் ஆபிசர் கிட்ட புகார் சொல்லியும் அவரும் கண்டுக்கவே இல்லையாம். இதேபோல, இன்னொரு ஜூனியர் அசிஸ்டெண்ட்டா உள்ள 5 எழுத்து பெயர் கொண்டவரும் சரியில்லையாம். 5 வருஷமா இவங்க 2 பேரும் ஒரே இடத்துல இருந்துகிட்டு வசூல் வேட்டை நடத்திக்கிட்டு வர்றாங்களாம். பிளாக் டெவலப்மெண்ட் ஆபிசரு இனிஷியல் தான் போடுவாரு. நான் தான் பில் பாஸ் செய்யணும்னு சொல்லி 2 பேரும் வசூலிக்குறாங்களாம். ஒரு எல்லுக்கு 3 கே கொடுக்கணுமாம். அதுக்கு மேல போன 5 கே கொடுக்கணுமாம். இப்படி ரேட் கார்டு போட்டு வசூல் வேலை நடக்குதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாங்கனி மாவட்டத்தில் தேனிக்காரரின் ஆதரவாளர்கள் யாருக்கு எதிராக கொதிக்கிறாங்க…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி மம்மியின் விசுவாசிகளின் கோயிலா இருந்த கொடநாடு பங்களாவில் நடந்த கொலையும், கொள்ளையும் எப்படி நடந்தது என்ற ஆயிரம் கேள்வி தேனி தலைவரின் ஆஸ்தான தொண்டர்களின் நெஞ்சில் அணையாமல் இருக்காம். மம்மியின் வீட்டில் என்ன காணாமல் போய் இருக்கும் என்பதை தேனிக்காரரின் ஆதரவாளர்கள் குழம்பி வர்றாங்க. இதனால, இந்த விவகாரத்துல உண்மையை வெளி உலகுக்கு காட்டணுமுன்னு தேனிக்காரரின் கோஷ்டிகள் முஷ்டியை உயர்த்திக்கிட்டிருக்காங்க. அதனால ஒண்ணாம் தேதி ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சிக்கிட்டிருக்காங்க. இதில் மாங்கனி நகரில் 5 மாவட்ட செயலாளர்கள் இருக்காங்களாம். ஒவ்வொருவரும் தலா ஆயிரத்து ஐநூறு பேரை அழைச்சிக்கிட்டு வந்து சேலம்காரருக்கு பெரிய ஷாக்கை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் நமக்கும் செல்வாக்கு இருக்குங்கிறதை தாமரையின் டெல்லி தலைமைக்கு காட்டி கூட்டணிக்குள்ளே போகணுமுன்னு ஒரு முடிவு செஞ்சாங்களாம். ஆனா அது கழுதை தேஞ்சி கட்டெறும்பான கதையா ஐநூறு ெதாண்டர்கள் எண்ணிக்கை கூட தாண்டாதாம். இதனால போராட்டம் எடுபடாமல் போகும் நிலை உருவாகியிருக்காம். இந்தநிலையில குக்கர் கட்சிக்காரங்களும் இந்த போராட்டத்துல கலந்துக்கப்போறதா சொல்றாங்க. அவங்களும் வந்தாங்கனா கூட்டம் அதிகரிக்குமாம். அதுவும் சந்தேகம் தானாம். தேனி தலைவரை எப்படி சமாளிப்பது என்ற குழப்பத்திலேயே தொண்டர்கள் இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post இலை கட்சி மாநாடு போகும் பெண்களின் பாதுகாப்பு பிரச்னையை எழுப்பியதால் அதிர்ந்து போன நிர்வாகிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Yananda ,Leaf party ,Doonga ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...