×

பூவலை ஊராட்சியில் சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை: பிடிஒ அலுவலகம் முற்றுகை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை ஊராட்சி இருளர் காலனி சுடுகாடுக்கு சுற்றுச்சுவர் ஏற்படுத்துவதாக கூறி, இரண்டு ஆண்டுகளாகியும் நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து, பூவலை இருளர் காலனி மக்கள், பள்ளி மாணவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை ஊராட்சி இருளர் காலனியில் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் காலம் காலமாக இறப்பவர்களை அடக்கம் செய்த 26 சென்ட் பரப்பிலுள்ள சுடுகாட்டிற்கு செல்லும் வழியை தனிநபர்கள் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்பி, இருளர் இன மக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டு வழி பாதையை மறித்தனர்.

இதனை எதிர்த்து அப்பகுதி மக்களோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாய சங்கம் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியது. பல கட்ட போராட்டத்திற்கு பிறகு கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி அப்போதைய கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மகேஷ் சுடுகாட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி சுடுகாட்டு பாதை சுற்றுச்சுவர் அமைக்க ரூ.13.69 லட்சத்துக்கு திட்ட அறிக்கை வழங்கினார். ஆனாலும் 2 ஆண்டுகளாக ஏற்கெனவே செய்து தருவதாக கூறிய சுடுகாட்டுப்பாதை, சுற்றுச்சுவர் பணிகளை செய்ய, வருவாய் துறை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு ஒப்புதல் தராமல் இருப்பதாக கூறி, பூவலை இருளர் இன மக்கள், அப்பகுதி பள்ளி மாணவர்களோடும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரோடும் சேர்ந்து கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அருள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சரவணன், மயில்வாகணன், மாரி, குருமூர்த்தி, செங்கல்வராயன் கண்டன உரையாற்றினர். நிகழ்வின்போது, பெண்கள் அங்கேயே விறகு அடுப்பு மூட்டி சமையல் செய்ய ஆரம்பித்தார்கள்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் பிரீத்தி, ஏடிஎஸ்பி அரிக்குமார், கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியாசக்தி, இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களோடு சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள் கூறிய சுடுகாட்டு பாதை இடத்திற்கான நில விவரமும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறிய நில விவரமும் வேறுவேறாக இருந்ததால் அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியாசக்தி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 1 வாரத்தில் இந்த சுடுகாட்டு பாதை விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் என வட்டாட்சியர் பிரீத்தி எழுத்து பூர்வமாக உறுதி அளித்தார். இதை தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால், அங்கு ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

The post பூவலை ஊராட்சியில் சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை: பிடிஒ அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Poovala ,Gummindipundi ,Gummipundi ,Bombay ,Dinakaran ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் மீது தாக்குதல்