×

தாம்பரம் சானடோரியத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டுமான பணி விரைவில் தொடக்கம்: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தகவல்

தாம்பரம்: குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அப்போது, தாம்பரம் சானடோரியம் பகுதியில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும், என தெரிவித்தார். குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது புறநோயாளிகளின் பிரிவினைப் பார்வையிட்டு அங்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், உள்நோயாளிகளின் பிரிவில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் நோயாளிகளிடம் நலம் விசாரித்து, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள பிரசவ அறையினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அறையினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திடவும், நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் அடிப்படைத் தேவைகளை 24 மணிநேரமும் கண்காணித்து வழங்கிடவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் மருத்துவமனையில் உள்ள கழிவறையை பார்வையிட்டு, கழிவறை மற்றும் மருத்துவமனை வளாகத்தினை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திட வேண்டுமென்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் குரோம்பேட்டை மருத்துவமனை வளாகத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மகப்பேறு குழந்தைகள் நலப் பிரிவு கட்டிடப் பணிகளையும், கட்டிடத்திற்கான வரைபடத்தினையும் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து தாம்பரம் சானடோரியத்தில் உள்ள காசநோய் மருத்துவமனை வளாகத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமையவுள்ள இடத்தினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் ககன்தீப் சிங் பேடி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள பல்வேறு வார்டுகளில் உயர் அலுவலர்களுடன் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் முதல்தளத்துடன் கூடிய மகப்பேறு குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தக் கட்டிடத்தின் மேற்பகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் இந்த மாவட்டத்திற்கான பொது சுகாதார ஆய்வகம் கட்டுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

ரூ.100 கோடி மதிப்பீட்டில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த தலைமை மருத்துவமனையினை தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சானடோரியத்தில் உள்ள காசநோய் மருத்துவமனை வளாகத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய தொல்லியல் துறையின் அனுமதி பெறப்பட்டவுடன் அந்த இடத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்,’’ என்றார்.
இந்த ஆய்வின்போது தேசிய நல வாழ்வு குழும திட்ட இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பழனிவேல் உட்பட உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post தாம்பரம் சானடோரியத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டுமான பணி விரைவில் தொடக்கம்: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : District Head Hospital ,Tambaram Sanatorium ,Public Welfare Department ,Tambaram ,Medical and Welfare Department ,Gagandeep Singh Bedi ,Krombettai Government Hospital ,
× RELATED ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு பிரசாரம்