×

புலியை பிடிக்க தீவிரம் காட்டும் ‘எலைட்’ குழு: இன்று ரப்பர் கழக மருத்துவமனை பகுதியில் ஆய்வு

குமரி மாவட்டம் சிற்றாறு சிலோன் காலனி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் புலி குடியிருப்புக்குள் புகுந்து ஆடுகள், நாய்களை கடித்து கொன்றுள்ளது. புலியைப் பிடிக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். 25க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களும், புலியை பிடிக்க கூண்டுகளும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் புலி சிக்கவில்லை.

சமீபத்தில் புலியை பிடிக்க சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் டம்மி ஆட்டு கொட்டகையில் கூண்டு வைத்த பிறகும், அதனருகே சென்ற புலி, உள்ளே சிக்கவில்லை. புலியை பிடிக்க மதுரை மற்றும் களக்காட்டில் இருந்து மருத்துவ குழுவினர் வந்துள்ளனர். ஏற்காடு வன உயிரியில் பூங்காவில் இருந்து ‘எலைட்’ என்ற சிறப்பு படையினரும் வந்துள்ளனர். இவர்கள் இணைந்து புலியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிக்கு சென்று புலியை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் எலைட் குழுவினர் இன்று புலி அதிகம் நடமாடப்படுவதாக சந்தேகிக்கப்படும் சிற்றாறு அரசு ரப்பர் கழக மருத்துவமனை அருகே உள்ள காட்டுப்பகுதியில் காலை முதலே தேடுதல் வேட்டையை தொடங்கினர். இந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் புலி தென்பட்டால் உடனே மயக்க ஊசி செலுத்தி பிடித்துவிடுவோம் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இன்று நடக்கும் புலிக்கும், எலைட் குழுவினருக்குமான கண்ணாமூச்சி ஆட்டத்தில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

The post புலியை பிடிக்க தீவிரம் காட்டும் ‘எலைட்’ குழு: இன்று ரப்பர் கழக மருத்துவமனை பகுதியில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Elite ,Rubber Club Hospital ,Kumari District Cricket ,Ceylon ,Colony ,Tiger ,Dinakaran ,
× RELATED சி பிரிவில் முதலிடம் பிடித்தது ரஞ்சி...