×

வலங்கைமான் பகுதியில் 5,000 எக்டேரில் குறுவை நெல் சாகுபடி

*இம்மாத இறுதியில் நடவுப்பணி நிறைவு

வலங்கைமான் : வலங்கைமான் தாலுகாவில் சாகுபடி செய்யப்பட்ட கோடை நெல் அறுவடை பணிகள் மற்றும் நடப்பு குருவை நெல் சாகுபடி பணிகள் ஆகியவை இம்மாத இறுதிக்குள் முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை குறைவின் காரணமாக மேட்டூர் அணை காலதாமதமாக திறக்கப்பட்டு முன்கூட்டியே மூடப்பட்டது. அக்காலகட்டங்களில் வடகிழக்கு பருவமழையை நம்பியே சம்பா சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் காரணமாக உரிய நேரத்தில் சம்பா சாகுபடி பணிகளை துவங்க இயலாமல் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின்னரே சாகுபடி பணிகள் துவங்கியது.

மேலும் அப்போது மூன்று போக சாகுபடி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஒரு போக சம்பா சாகுபடியை மிகுந்த போராட்டத்துக்கு இடையே மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு முன்கூட்டியே மேட்டூர் அணை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அதனை அடுத்து கால தாமதம் இன்றி குறித்த நேரத்தில் சம்பா சாகுபடி பணிகள் துவங்கியது.
வலங்கைமான் தாலுக்காவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு வெட்டாறு வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளன் ஆறு மூலம் பாசன வசதி பெறுகின்றது.

கடந்தாண்டு 8 ஆயிரத்து 950 ஹெக்டேரில் சம்பாவும் சுமார் நான்காயிரம் எக்டேரில் குறுவை அறுவடைக்குப் பின் மேற்கொள்ளக்கூடிய தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இவை அறுவடைப் பணிகள் முடிவுற்றள்ள நிலையில் கோடை சாகுபடியாக மார்ச் மாதத்தில் 8ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி முடிவுற்றது.
அதனைத் தொடர்ந்து கோடை சாகுபடியாக நெல் சாகுபடி சுமார் 6000 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இம்மாத இறுதிக்குள் கோடை நெல் அறுவடை பணிகள் முடிவுறும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளும் வகையில் நடப்பு ஆண்டில் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையினை பாசனத்திற்கு தமிழக முதல்வர் திறந்து வைத்தார் முன்கூட்டியே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் வலங்கைமான் வட்டார விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் குறுவை சாகுபடி பணிகளை செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு விவசாயிகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்தது.

வலங்கைமான் வட்டாரத்தில் சுமார் 5,000 ஹெக்டேர் நிலபரப்பில் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. குறுவை சாகுபடிகள் இயந்திர நடவு நேரடி விதைப்பு கை நடவு உள்ளிட்ட முறைகளில் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாத இறுதிக்குள் குறுவை சாகுபடி பணிகள் முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வலங்கைமான் தாலுகாவில் முன்னதாக சுமார் 6000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கோடை நெல் சாகுபடி அறுவடை பணிகளும் சுமார் 5,000 எக்டேரில் குறுவை நெல் நடவு பணிகளும் இம்மாத இறுதிக்குள் முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

The post வலங்கைமான் பகுதியில் 5,000 எக்டேரில் குறுவை நெல் சாகுபடி appeared first on Dinakaran.

Tags : Kurvai ,Walangaiman ,Valangaiman ,
× RELATED முன்பட்ட குறுவை சாகுபடி பணிகள் துவக்கம்