×

மணிப்பூர் பாலியல் கொடுமை எதிரொலி கோத்தகிரியில் ஒட்டு மொத்த இருளர் பழங்குடி கிராம மக்கள் திமுகவில் இணைந்தனர்

கோத்தகிரி : மணிப்பூர் பாலியல் வன்கொடுமை விவகாரம் எதிரொலியாக ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து கோத்தகிரியில் ஒட்டு மொத்த இருளர் பழங்குடியின கிராம பகுதியினர் திமுகவில் இணைந்தனர். மணிப்பூரில் பழங்குடியினர் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையால் ஒட்டு மொத்த இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அதிர்ந்து போயுள்ளன.

இந்நிலையில், நாட்டிலுள்ள அனைத்து தரப்பு மக்களும் பாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடைக்கோடி அடர்ந்த வனப்பகுதியில் இருளர் பழங்குடியினர் மட்டுமே வாழக்கூடிய தாலாமொக்கை பழங்குடியினர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் இருளர் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த 80 குடும்பத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை ஒட்டு மொத்தமாக பாஜவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக திகழும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சியை வரவேற்று நேற்று ஒட்டுமொத்த கிராமத்தினரும் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் மற்றும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாலாமொக்கை பழங்குடியினர் தங்களது கிராமத்தில் முதன்முறையாக, நாடு சுதந்திரம் பெற்ற பிறகு திமுகவின் கொடியை ஏற்றி அனைவரும் திமுகவில் இணைந்தனர்.

அத்துடன் பழங்குடியினருக்கு பாதுகாப்பாக தமிழ்நாடு அரசு திகழ்வதாக பழங்குடியினர் பெருமிதம் கொண்டனர். இதையடுத்து திமுகவில் இணைந்த அனைத்து பழங்குடியினருக்கும் ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் மற்றும் பெருந்தலைவர் ராம்குமார் ஆகியோர் திமுக துண்டு அணிந்து வரவேற்றனர். மணிப்பூர் கொடூர சம்பவம் எதிரொலியாக ஒரு கிராமம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த பழங்குடியினர் திமுகவில் இணைந்தது, தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

The post மணிப்பூர் பாலியல் கொடுமை எதிரொலி கோத்தகிரியில் ஒட்டு மொத்த இருளர் பழங்குடி கிராம மக்கள் திமுகவில் இணைந்தனர் appeared first on Dinakaran.

Tags : Kotakiri ,Manipur ,Gothagiri ,Union government ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...