×

பரதநாட்டியம் ஆடியபடி 14 கி.மீ தூரம் கிரிவலம் வியப்பில் ஆழ்த்திய ஆந்திர மாநில மாணவி திருவண்ணாமலையில் உலக நன்மை வேண்டி

திருவண்ணாமலை: ஆந்திராவைச்சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் உலக நன்மை வேண்டி பரதநாட்டியம் ஆடியபடி 14 கி.மீ தூரம் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று வழிபட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாகும். இங்கு பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். இறைவனே மலை வடிவாக இங்கு காட்சியளிப்பதால் மலையைச் சுற்றியுள்ள 14 கி.மீ தூரத்தையும் பக்தர்கள் நடந்து சென்று வழிபடுகின்றனர். தீவிர பக்தியுடைய சில பக்தர்கள், அடி பிரதட்சணமாகவும், அங்க பிரதட்சணமாகவும் கிரிவலம் செல்வதும் உண்டு.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச்சேர்ந்த பரதநாட்டிய கலைஞரான மாணவி பவ்ய ஹாசினி(17), என்பவர் பரதநாட்டியம் ஆடியபடி திருவண்ணாமலையில் 14 கி.மீ. தூரம் கிரிவலம் சென்று நேற்று வினோதமான முறையில் வழிபட்டார். அவருக்கு முன்னாள் ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனத்தில் பரதநாட்டியத்திற்கு தகுந்த இசை பாடல்கள் ஒலித்த படி சென்றது. அந்த பாடல்களுக்கு தகுந்தபடி, மாணவி பவ்ய ஹாசினி பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் சென்றார். அதிகாலை சுமார் 5 மணிக்கு தொடங்கி காலை 9 மணிக்கு ராஜகோபுரம் முன்பு கிரிவலத்தை நிறைவு செய்தார். கிரிவலத்தின்போது லேசான மழை தூறல் இருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் அந்த மாணவி பரதநாட்டியம் ஆடியப்படி கிரிவலம் சென்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இதுகுறித்து மாணவியின் தரப்பில் கூறுகையில், ‘சிறு வயதிலிருந்து பரதநாட்டியத்தை முறையாக கற்று வருவதாகவும் சலங்கை பூஜை சமீபத்தில் நிறைவேற்றியதாகவும்’ கூறினர். மேலும், அண்ணாமலையாரின் தீவிர பக்தரான பல்ய ஹாசினி, உலக நன்மை வேண்டி பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் சென்றதாக தெரிவித்தனர். திருவண்ணாமலையில், ஆந்திராவைச் சேர்ந்த பவ்ய ஹாசினி என்ற பெண் பரதநாட்டியம் ஆடியபடியே கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டார்.

The post பரதநாட்டியம் ஆடியபடி 14 கி.மீ தூரம் கிரிவலம் வியப்பில் ஆழ்த்திய ஆந்திர மாநில மாணவி திருவண்ணாமலையில் உலக நன்மை வேண்டி appeared first on Dinakaran.

Tags : Andhra ,Krivalam ,Tiruvannamalai ,
× RELATED நில உரிமை சட்டம் குறித்து தவறான...