×

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நடந்த பெண் வியாபாரி கொலையில் தங்கை உள்பட 5 பேர் கைது: வாழவிடாமல் தடுத்ததால் தீர்த்துக்கட்டியதாக வாக்குமூலம்

 

சென்னை: சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் வியாபாரியை வெட்டி கொலை செய்த வழக்கில், அவரது தங்கை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆதம்பாக்கம் இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (30). இவர், சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயிலில் பழ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி இவர் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலில் பழ வியாபாரம் செய்தார். இந்த ரயில் இரவு 8 மணிக்கு சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றபோது, ராஜேஸ்வரி கீழே இறங்கியபோது, அவரை பின்தொடர்ந்து வந்த 4 பேர், மறைத்து வைத்திருந்த கத்தியால், அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.

தகவலறிந்த மாம்பலம் ரயில்வே போலீசார் விரைந்து வந்து, ராஜேஸ்வரியை மீட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து விசாரித்தனர். அதில், ராஜேஸ்வரியை அவரது தங்கையான திருநின்றவூரை சேர்ந்த நாகவள்ளி (23), அவரது கணவர் சக்தி (எ) சக்திவேல் (25), புழுதிவாக்கத்தை சேர்ந்த ஜெகதீஸ் (23), மடிப்பாக்கத்தை சேர்ந்த சூரியா (19), ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த ஜான்சன் (19) ஆகிய 5 பேர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுபற்றி போலீசார் கூறியதாவது:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாம்பலம் ரயில் நிலையத்தில் சக்திவேலுக்கும், வேறு சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், ராஜேஸ்வரி இந்த விவகாரத்தில் தலையிட்டு, சக்திவேல் மீது வழக்கு பதிவு செய்ய வைத்துள்ளார். இது சக்திவேல் தரப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில் சக்திவேல், ராஜேஸ்வரியின் தங்கை நாகவள்ளியை காதலித்து திருமணம் செய்தார். இதை அறிந்த ராஜேஸ்வரி சக்திவேலையும், நாகவள்ளியையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் ராஜேஸ்வரி மீது ஆத்திரமடைந்த சக்திவேல் தனது மனைவி நாகவள்ளி மற்றும் நண்பர்கள் சூர்யா, ஜெகதீஷ், ஜான்சன் ஆகியோருடன் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

நாகவள்ளி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: நான் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வசித்து வந்தேன். இந்த சூழலில், சக்திவேலுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தோம். இது எனது அக்கா ராஜேஸ்வரிக்கு பிடிக்காததால் சக்திவேலுடன் என்னை வாழ விடமாட்டேன் என்று மிரட்டினாள். இதனால் சக்திவேலுடன் வாழ முடியாதோ என்று அஞ்சி, எனது அக்காவை கொன்றுவிடு, என்று சக்திவேலிடம் கூறினேன். இதனால் சக்திவேல் தனது நண்பர்களுடன் சேர்ந்து ராஜேஸ்வரியை கொலை செய்ய திட்டமிட்டார். அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தோம். அவள் வரும் நேரத்தையும், எங்கு வைத்து கொலை செய்யலாம் என்றும் ரகசியமாக ஆலோசித்தோம்.

அதன்படி ரயிலில் பழ வியாபாரம் செய்துவிட்டு வந்தபோது சக்திவேல் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து எங்கள் திட்டப்படி கொலை செய்தனர். இவ்வாறு கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ரயில்வே காவல் கண்காணிப்பாளர் பொன்ராமு செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ராஜேஸ்வரியும், கைது செய்யப்பட்டவர்களும் புறநகர் ரயில் நிலையங்களில் வியாபாரம் செய்து வந்தவர்கள். இதில் சக்தி (எ) சக்திவேல் மற்றும் ஜெகதீஸ் என்பவருக்கும், ராஜேஸ்வரிக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. அதன் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. கொலையாளிகள் 3 பேரை கோவளம் அருகில் கைது செய்து விசாரணை நடத்தினோம். மேலும் 2 பேரை நங்கநல்லூர் அருகே உள்ள உள்ளகரத்தில் கைது செய்தோம்,’’ என்றார். இதையடுத்து, கைதான 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

The post சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நடந்த பெண் வியாபாரி கொலையில் தங்கை உள்பட 5 பேர் கைது: வாழவிடாமல் தடுத்ததால் தீர்த்துக்கட்டியதாக வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Saitappettai railway station ,CHENNAI ,
× RELATED சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் தீ...