×

பாமக நிர்வாகி கொலை வழக்கில் தமிழ்நாட்டில் 21 இடங்களில் என்ஐஏ சோதனை: முக்கிய பிரமுகர்கள் வீடுகளிலும் ரெய்டு

சென்னை: பாமக நிர்வாகி திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சை, நெல்லை உட்பட 9 மாவட்டங்களில் 21 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம்(53). பாமக பிரமுகரான இவர், திருபுவனம் கடை வீதியில் தமிழன் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வந்தார். கடந்த 2019 பிப்ரவரி 5ம் தேதி அப்பகுதியில் மதமாற்ற பிரசாரத்தில் சிலர் ஈடுபட்டதாக கூறி, ராமலிங்கம் தகராறில் ஈடுபட்டார். பின்னர், ராமலிங்கம் மர்ம நபர்களால் அன்று இரவே வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக 12 பேர் மீது திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்ததாக குறிச்சிமலையை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த கொலையில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கொலை வழக்கு தமிழ்நாடு காவல்துறையில் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றம் செய்யப்பட்டது. அதன் பேரில் என்ஐஏ அதிகாரிகள் தனியாக வழக்கு பதிவு செய்து ராமலிங்கத்தை படுகொலை செய்ததாக 12 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது நடந்து வருகிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி முக்கிய குற்றவாளியாக கூறப்படும் திருபுவனம் வடக்கு முஸ்லிம் தெரு முகமது அலி ஜின்னா(37), கும்பகோணம் மேலக்காவேரி அப்துல் மஜித்(40), பாபநாசம் அடுத்த வடக்கு மாங்குடி வஞ்சுவலி பள்ளிவாசல் தெரு புர்ஹானுதீன்(37), திருமங்கலக்குடி ஜாகிர் உசேன் தெரு சாகுல் ஹமீது(30), நபீல்ஹசன்(32) ஆகிய 5 பேர் இருப்பது தெரியவந்தது. 4 ஆண்டுகளாக 5 பேரும் தலைமறைவாக இருந்து வருகின்றனர். இந்த 5 பேரும், தமிழகத்தில் உள்ள முக்கிய நபர்களுடன் தொடர்பில் இருப்பதாக ஒன்றிய உளவுத்துறை மூலம் என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் 40 பேர் தனித்தனி குழுக்களாக பிரிந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அதிகாலை முதல் பிற்பகல் வரை தஞ்சை, கும்பகோணம், திருபுவனம், திருமங்கலக்குடி, பாபநாசம், ராஜகிரி, அதிராம்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 9 இடங்களில் சோதனை நடந்தது. அதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரிழந்தூர் பட்டகால் தெருவை சேர்ந்த நிஷார் அகமது(48) வீட்டில் 5 பேர் கொண்ட குழுவினரும், புதுக்ேகாட்டை உசிலம்குளத்தை சேர்ந்த எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த ரசீத் முகமது என்பவரின் வீட்டில் 4 பேர் கொண்ட குழுவினரும் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் இருந்து லேப்டாப், பென் டிரைவ், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி: திருச்சி பீமநகர் பண்டரிநாதபுரத்தில் அப்சல் கான் என்பவரது வீட்டில் 3 என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர். நெல்லை: நெல்லை மேலப்பாளையம் ஹக் காலனியில் வசித்து வரும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் நேற்று அதிகாலை 5 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். இதையடுத்து எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அவரது வீட்டின் அருகே ஒன்று கூடி கோஷமிட்டனர்.

கோவை: கோவை கோட்டைமேடு எச்எம்பிஆர் வீதியில் உள்ள ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் நிர்வாகி அப்பாஸ் வீட்டில் 3 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல் விழுப்புரம், திருப்பூர் , மதுரை என 9 மாவட்டங்களில் 21 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

The post பாமக நிர்வாகி கொலை வழக்கில் தமிழ்நாட்டில் 21 இடங்களில் என்ஐஏ சோதனை: முக்கிய பிரமுகர்கள் வீடுகளிலும் ரெய்டு appeared first on Dinakaran.

Tags : NIA ,Tamil Nadu ,BMC ,Chennai ,Tiruchi ,Tanjore ,Nellai ,BAMA ,Thirubhuvanam Ramalingam ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...