×

‘என்கிட்ட வச்சுக்காதீங்க…என்னை எதுவும் செய்ய முடியாது…’புதுவை பாஜ எம்எல்ஏக்களை மிரட்டிய மர்ம நபர்: காவல் நிலையத்தில் புகார்

புதுச்சேரி: பாஜ எம்எல்ஏக்களுக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்தது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி எம்எல்ஏ கல்யாணசுந்தரம், நேற்று காலை நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது போன் செய்த மர்ம நபர், முன்னாள் அமைச்சர், எம்எல்ஏ கல்யாணசுந்தரம்தானே, எனக்கேட்டு சகட்டுமேனிக்கு வசைபாடியிருக்கிறார். என்னப்பா? யார் வேண்டும் என அவர் கேட்டபோது, ‘உங்களுக்கு பதில் சொல்ல முடியாது. என்னை ஏதும் உங்களால் செய்ய முடியாது, பாக்குறீங்களா?’ எனக்கூறி மிரட்டல் விடுத்துள்ளார். ‘என் தொலைபேசி எண் உங்களுக்கு எப்படி கிடைத்தது’ என எம்எல்ஏ கேட்டபோது, ‘காரைக்காலில் ஒருவரிடமிருந்து வாங்கினேன்’ என்றார்.

அதற்கு அவர் இப்போது என்ன வேண்டும் என கேட்டபோது, ‘என்னிடம் வைத்துக்கொள்ளாதீர்கள்’ எனக்கூறி போனை துண்டித்துவிட்டார். ஏதோ குடிகாரன் பேசுவதாக நினைத்துக்கொண்ட எம்எல்ஏ, இதனை பெரிதுப்படுத்தவில்லை. இதற்கிடையே திருபுவனை தொகுதி பாஜ ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ அங்காளனுக்கு நேற்று மாலை சொல்போனில் பேசிய மர்ம நபர், ‘என்னிடம் மோத வேண்டாம், நீங்கள் முன்னாள் அமைச்சரா? என்கிட்ட வச்சுக்காதீங்க…’ எனக்கூறி சகட்டு மேனிக்கு வசைபாடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்காளன், திருக்கனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

விசாரணையில் எம்எல்ஏக்கள் இருவரையும் தொலைபேசியில் மிரட்டியது, ஒரே நபர் என்றும், ஒரே எண்ணை பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து காரைக்கால் மாவட்ட போலீசார் விசாரணை நடத்தியதில் நாகப்பட்டினம் அடுத்த செம்பியன்மகாதேவியை சேர்ந்தவர் மிரட்டியது தெரியவந்தது. அவரை கைது செய்ய காரைக்கால் போலீசார் நாகப்பட்டினம்
விரைந்துள்ளனர்.

The post ‘என்கிட்ட வச்சுக்காதீங்க…என்னை எதுவும் செய்ய முடியாது…’புதுவை பாஜ எம்எல்ஏக்களை மிரட்டிய மர்ம நபர்: காவல் நிலையத்தில் புகார் appeared first on Dinakaran.

Tags : BJP ,Puducherry ,Kalapattu Constituency ,MLA ,Kalyanasundaram ,Puduwai ,BJP MLAs ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.வி.க. போராட்டம்..!!