×

கடம்பூர் மலைப்பகுதியில் இருசக்கர வாகனத்தை மிதித்து துவம்சம் செய்த காட்டு யானை: வாகன ஓட்டி தப்பியோட்டம்

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. யானைகள் தீவனம் மற்றும் தண்ணீர் தேடி மலை கிராமங்களுக்கு செல்லும் சாலையை கடந்து செல்கின்றன.

இந்நிலையில் கடம்பூரில் இருந்து இருட்டிபாளையத்துக்கு செல்லும் சாலையில் நேற்று மாலை இரு சக்கர வாகனங்களில் மலை கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் சென்று கொண்டிருந்தனர். 21வது மைல் என்ற மேடான பகுதியில் வனத்தில் இருந்து வெளியேறிய ஆண் யானை சாலையை கடக்க முயன்றது.

இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் யானை சாலையை கடக்கும் வரை காத்திருந்தனர். ஆனால் யானை இரு சக்கர வாகன ஓட்டிகள் நிற்பதை பார்த்து ஆத்திரமடைந்து அவர்களை நோக்கி துரத்திக்கொண்டு ஓடி வந்தது. இதனால் அங்கிருந்த ஒருவர் பைக்கை அதே இடத்தில் நிறுத்தி விட்டு தப்பியோடினார்.

இதைக் கண்ட யானை ஆத்திரத்தில் சாலையில் இருந்த பைக் தந்தத்தால் தாக்கி துவம்சம் செய்தது. இது குறித்து வனத்துறையினருக்கு கிராமமக்கள் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் யானையை பட்டாசு வெடித்து காட்டுக்குள் துரத்தி அடித்தனர்.

யானைகள் சாலையை கடப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தினர். இச்சம்பவம் கடம்பூர் மலைப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கடம்பூர் மலைப்பகுதியில் இருசக்கர வாகனத்தை மிதித்து துவம்சம் செய்த காட்டு யானை: வாகன ஓட்டி தப்பியோட்டம் appeared first on Dinakaran.

Tags : Kadampur hillside ,Satyamangalam Tiger Archive ,
× RELATED கடம்பூர் மலைப்பகுதியில் 3 கிமீ தூரம்...