×

விருந்தை பெருமைப்படுத்தும் தஞ்சாவூர் தலை வாழை இலை: புதுசு, புதுசா யோசித்து கலக்கும் தஞ்சை விவசாயிகள்!

தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் வாழை இலையில் சாப்பிடுவதை விரும்புகின்றனர். அதிலும் கிராமப்புறங்களில் வாழை இலை எளிதில் கிடைக்கும். நகர்ப்புறங்களிலும் வீட்டுத் தோட்டத்தில் வாழை இடம் பெற்றிருக்கிறது. இதனால் வாழை இலையில் உணவருந்தும் பழக்கம் தொடந்து வருகிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்படுவது தஞ்சாவூர் மாவட்டமாகும். தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் என ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் முக்கிய விளைபொருளாக இருப்பதால் நெற்களஞ்சியம் என்று பெயர் பெற்றது. பொதுவாக தஞ்சாவூர் என்றதும் தலையாட்டி பொம்மைதான் நினைவுக்கு வரும். இங்கு சுற்றுலா வருபவர்கள் வாங்கிச் செல்லும் பொருட்களில் முக்கியமானது இந்த தலையாட்டி பொம்மையும் ஒன்றாகும். இதற்கு அடுத்து தஞ்சாவூர் கலைத் தட்டு. கலையம்சம் கொண்ட இத்தட்டுக்கள் உலகம் முழுவதும் பிரபலமானதாகும். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல இருப்பது தஞ்சை பெரிய கோயிலாகும். இவ்வாறு பல்வேறு சிறப்புக்களை கொண்ட தஞ்சாவூர் மற்றொன்றுக்கும் பெயர் பெற்றது என்பது பலரும் அறிந்திராதது. கிராமப்புற விருந்துகளில் தல வாழை இலை சாப்பாடுப்பா என்று பெருமை பேசப்படுவதை இன்றளவும் காணலாம். தலை வாழை இலைகளில் மட்டும் விருந்தளித்து பெருமிதப்படும் வழக்கம் இருக்கிறது. அந்த வகையில் தலை வாழைக்கு பெயர் பெற்றதாக தஞ்சாவூர் வாழை இலைகள் இருக்கின்றன. கிராமப்புறங்களில் தாட்பூட் தஞ்சாவூர் என்ற சொலவடை பிரபலம். இந்த சொற்றொடரில் தாட் என்பது இலையை குறிக்கிறது என்கின்றனர் வாழை விவசாயிகள். சரி! அது என்ன தாட்டு இலை?. நுனி இலையான தலைவாழை இலை என்பதன் மறு பெயர் தாட்டு இலை. அதாவது நீளம், அகலம், உயரம், கனம் என்று அனைத்திலும் அசாதாரணமாக இருப்பதுதான் தாட்டு இலைகள். இந்த தலை வாழை இலை சாகுபடிக்கு பெயர் பெற்றதாக தஞ்சாவூர் மாவட்டம் விளங்குகிறது.

பொதுவாக திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் வாழை விவசாயம் பிரதானமாக இருக்கிறது. அதிலும் திருச்சி, கரூர் மாவட்டங்களில் பிரதானமாக வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இம்மாவட்டங்களில் வாழைத்தாருக்காக (பழம், காய்) வாழை சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக தென்னையும், வாழையும் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. அதிலும் திருவையாறு, அம்மன்பேட்டை, திருக்காட்டுப்பள்ளி, மேலத்திருப்பூந்துருத்தி, கும்பகோணம், பாபநாசம், அய்யம்பேட்டை பகுதிகளில் அதிகளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இப் பகுதிகளில் இலைக்காகவே வாழை பயிரிடப்படுகிறது. இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் இலைகள் சென்னையில் உள்ள ஓட்டல்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. தஞ்சையில் மாலையில் அறுவடை செய்யப்படும் வாழை இலைகள் கட்டுக்களாக கட்டப்பட்டு திருச்சி, சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு பஸ்களில் அனுப்பப்படுகிறது. இதனால் காலையிலேயே பசுமையான தஞ்சாவூர் இலைகள் சென்னையின் உணவகங்களை அலங்கரிப்பதை காணலாம். இதனால் தஞ்சையின் தலைவாழை இலைகளை எதிர்பார்த்து சென்னைவாசிகள் எப்போதும் காத்திருக்கின்றனர். இந்த இலைகள் 11 அடி நீளம் வரை பிரமாண்டமாக இருக்கும். இவற்றை கிழியாமல் அறுத்து அதை கட்டுக்களாக கட்டி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த இலைகள் பொதுவாக எளிதில் கிழியாத அளவுக்கு சற்று தடிமனாக இருக்கும். இதில் நுனி இலை (தலை வாழை இலை), ஏடு என 2 வகைகளாக ஓட்டலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் நுனி இலையான தாட்டு இலை எனப்படும் தலைவாழை இலைகளுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும்.

இது குறித்து திருவையாறு அருகேயுள்ள வடுகக்குடியை சேர்ந்தவரும், தஞ்சாவூர் மாவட்ட வாழை விவசாயிகள் சங்கத் தலைவரும், முன்னோடி வாழை விவசாயியுமான மதியழகன் தெரிவித்ததாவது: சாப்பாட்டு இலைக்காகவே சாகுபடி செய்யும் இந்த வாழை பூவன் ரகமாகும். இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது கரும்பச்சை நிறத்தில் சற்று தடிமனாக இருக்கும். ஒரு ஏக்கரில் நல்ல மகசூல் பெற 1000 கன்றுகள் நடவேண்டும். நட்ட 5 வது மாதம் முதல் அறுவடை செய்யலாம். மொத்தம் 10 மாதம் அறுவடை செய்ய முடியும். திடகாத்திரமான ஒரு வாழையில் அதிக பட்சமாக 32 இலைகள் அறுவடை செய்யலாம். நன்கு வளர்ந்த ஒரு இலை 11 அடி நீளம் வரை இருக்கும். தாய் வாழையின் அடியில் வளரும் கன்றுகளை முறையாக பராமரித்து இலைகளை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய ரூ.1.50 லட்சம் வரை செலவாகும். நல்ல முறையில் பராமரித்து அறுவடை செய்தால் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் லாபம் கிடைக்கும். எங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஆண், பெண் வித்தியாசமின்றி சம ஊதியம் தருகிறோம். கணவன், மனைவி இருவரும் ஒருநாள் முழுக்க வேலை செய்தால் ரூ.1300 வரை ஊதியம் பெற முடியும். இந்த இலைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால் இதை ஏற்றுமதி செய்வதில் நடைமுறை சிக்கல்கள் நிறைய இருக்கிறது. எனவே அரசு எங்களுக்கு இதை எளிமையாக்கி உதவ வேண்டும். மேலும் தோட்டக்கலைத்துறை சார்பில் எங்களுக்கு அளிக்கப்படும் நுண்ணூட்ட உரங்கள் போன்றவை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post விருந்தை பெருமைப்படுத்தும் தஞ்சாவூர் தலை வாழை இலை: புதுசு, புதுசா யோசித்து கலக்கும் தஞ்சை விவசாயிகள்! appeared first on Dinakaran.

Tags : Tanjana Farmers ,Tamil Nadu ,
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...