×

வேலூர் கோட்டையில் கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளது பாதுகாப்பற்ற நிலையில் ஜலகண்டேஸ்வரர் கோயில் தங்கத்தேர்: பக்தர்கள் வேதனை

வேலூர்: வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் தங்கத்தேர் பாதுகாப்பற்ற நிலையில் வெட்டவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சம்புவராயர்களால் கட்டப்பட்டு, விஜயநகர நாயக்க மன்னர்களால் மேம்படுத்தப்பட்ட வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மூலவர் இல்லாத நிலை கடந்த 1981 மார்ச் 16ம்தேதி முடிவுக்கு வந்தது. 1982ம் ஆண்டு முறையான கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு அப்போது முதல் மக்களின் வழிபாட்டில் இருந்து வருகிறது. ஜலகண்டேஸ்வரர் கோயிலில் அன்றாட பூஜைகள், கும்பாபிஷேகம், திருவிழாக்கள் உட்பட அனைத்தையும் ஜலகண்டேஸ்வரர் கோயில் தரும ஸ்தாபனம் நடத்தி வருகிறது. கோயிலுக்கு ஏற்கனவே தங்கத்தேர், கொடிமரம் என அனைத்தும் தற்போது முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இக்கோயிலுக்கு ரூ.5 கோடியில் தனியார் நன்கொடையில் 25 அடி உயர தங்கத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பிரதிஷ்டையுடன், கோயிலின் 4வது மகா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 25ம் தேதி நடந்தது. இந்த நிலையில் பல கோடியில் உருவாக்கப்பட்ட தங்கத்தேர் தற்போது கோயிலின் வெளியில் திட்டிவாசலின் அருகில் பாதுகாப்பற்ற நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தங்கத்தேரை பாதுகாப்புடன் நிறுத்துவதற்காக சுற்றிலும் இரும்பு தகடுகளுடன் கூடிய சுவற்றுடன் கூடிய கூரை அமைக்க கோயில் நிர்வாகம் தொல்லியல்துறையை அணுகியதாகவும், அதற்கு தொல்லியல்துறை மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் இப்போதுள்ள இடத்தில் உள்ள தங்கத்தேரை கோசாலா இருக்கும் இடத்தில் நகர்த்தி வைக்கும்படி தொல்லியல் துறை அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் வெயிலிலும், மழையிலும் கோயிலுக்கான தங்கத்தேர் பாதுகாப்பற்ற சூழலில் ஒரே ஆள் பாதுகாப்பில் உள்ளது பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக தொல்லியல்துறையின் வேலூர் கோட்டை பராமரிப்பு அலுவலர் அகல்யாவிடம் கேட்டபோது, ‘தொல்லியல் துறையின் விதிகள் தங்கத்தேருக்கு கூரை அம்சம் கொண்ட நிறுத்துமிடம் அமைக்க அனுமதி தராது. மேலும் ஏற்கனவே ஒரு தங்கத்தேர் கோயிலுக்கு உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேரை கோசாலாவின் அருகில் நகர்த்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் தொல்லியல்துறையின் உயர்அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்றார்.

The post வேலூர் கோட்டையில் கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளது பாதுகாப்பற்ற நிலையில் ஜலகண்டேஸ்வரர் கோயில் தங்கத்தேர்: பக்தர்கள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Vellore Fort Jalakandeswarar Temple ,Thangatere ,Vellore ,Dangatere ,Thangadere ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...