×

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 24 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 24 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் 24 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி, தஞ்சை, கும்பகோணம், கோவை, திருப்பூர், மதுரை, மயிலாடுதுறை, நெல்லை மாவட்டங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். குறிப்பாக மதமாற்றத்தை தட்டிக்கேட்டதற்காக ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. கொலை வழக்கு தொடர்பாக 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வரும் நிலையில், 12 பேர் கைது செய்யப்பட்டு விட்டனர். தலைமறைவாக உள்ள 6 பேரை என்ஐஏ தேடி வருகிறது. குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த 18 பேர் மீது என்ஐஏ ஐந்தாயிரம் பக்கத்தில் முதற்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், இன்று ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டில் 24 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி, தஞ்சை, கும்பகோணம், கோவை, திருப்பூர், மதுரை, மயிலாடுதுறை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் உள்ள 24 இடங்களில் காலை 6 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள எஸ் டி பி ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக்கிடம் அவரது இல்லத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் உசிலங்குளம் பகுதியில் உள்ள ரஷீத் என்பது வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொறுப்பாளராக இவர் உள்ளார். இதே போல மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே காமராஜர் நகரைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் திருபுவனம் ராமலிங்கம் படுகொலை தொடர்பாக திருபுவனம் ஜின்னா, திருமங்கலக்குடி முகமது நபீல் , PFI முன்னாள் மாவட்ட தலைவர் குலாம் உசேன், சாகுல் ஹமீது, உள்ளிட்டார் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வழக்கில் தேடப்பட்டு வரும் திருபுவனம் ஜின்னா, திருமங்கலக்குடி சாகுல் ஹமீது, வீடுகளிலும் திருமங்கலக்குடி முகமது நபீல் , PFI முன்னாள் மாவட்ட தலைவர் குலாம் உசேன் உள்ளிட்டார் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அதிகாலை முதல் திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை கோட்டைமேடு பகுதியில் அப்பாஸ் என்பவரது வீட்டில் காலை 6 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்பாஸ் பி.எப்.ஐ அமைப்பின் நிர்வாகியாக இருத்தவர். 3 மணி நேரமாக நடைபெற்ற நிலையில், அப்பாஸ் வீட்டிலிருந்து அவரது ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆகியவற்றை என்.ஐ.அதிகாரிகள் எடுத்து சென்றனர். மேலும் அப்பாஸின் மொபைல் போன், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அவரது வீட்டிலிருந்து 90,000 ரூபாய் பணம் ஆகியவற்றையும் அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர். இதனை அடுத்து அப்பாஸ் வீட்டில் நடைபெற்ற சோதனை மட்டும் நிறைவடைந்தது. அப்பாஸ் ,கோவை PRS மைதானத்தில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் 12 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என தேசிய புலானாய்வு முகாமை அதிகாரிகள் சம்மன் வழங்கியுள்ளனர்.

 

The post திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 24 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Tags : Thirupuvanam ,Ramalingam ,NNI ,Tamil Nadu ,GI ,Thanjavur ,Tamil Nadu, Tamil Nadu ,GI A. ,Thirubuvanam Ramalingam ,Thirupuvanam Ramalingam ,Dinakaran ,
× RELATED 20 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு...