×

‘டை’யில் முடிந்தது கடைசி ஆட்டம்: கோப்பையை பகிர்ந்த இந்தியா, வங்கதேசம்!

மிர்பூர்: இந்தியா – வங்கதேசம் மகளிர் அணிகளிடையே நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, யாருக்கும் வெற்றி தோல்வியின்றி சரிசமனில் (டை) முடிந்ததை அடுத்து இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன. வங்கதேசம் சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் வங்கதேசம் 40 ரன் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்ற நிலையில், 2வது போட்டியில் இந்தியா 108 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது.

இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, கடைசி போட்டி மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன் குவித்தது. தொடக்க வீராங்கனைகள் ஷமிமா சுல்தானா 52, பர்கானா ஹக் 107 ரன், கேப்டன் நிகர் சுல்தானா 24, ஷோபனா 23 ரன் விளாசினர். சர்வதேச மகளிர் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் வங்கதேச வீராங்கனை என்ற சாதனை பர்கானா வசமானது.

அடுத்து களமிறங்கிய இந்தியா 41.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன் எடுத்திருந்த நிலையில், அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மந்தனா 59, ஹர்லீன் தியோல் 77 ரன் விளாசிய நிலையில், மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேறினர். கடைசி கட்டத்தில் ஜெமிமா ரோட்ரிகியூஸ் கடுமையாகப் போராடியதால் இந்தியா வெற்றியை நெருங்கியது. கடைசி 4 பந்தில் 1 ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் இந்தியா 49.3 ஓவரில் 225 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

ஜெமிமா 33 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சூப்பர் ஓவருக்கு நேரம் இல்லாததால் ஆட்டம் ‘டை’ ஆனதாக நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன. போட்டியின் சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஹர்லீன் தியோல், தொடரின் சிறந்த வீராங்கனையாக வங்கதேசத்தின் பர்கானா தேர்வு செய்யப்பட்டனர்.

The post ‘டை’யில் முடிந்தது கடைசி ஆட்டம்: கோப்பையை பகிர்ந்த இந்தியா, வங்கதேசம்! appeared first on Dinakaran.

Tags : India ,Bangladesh ,Mirpur ,Dinakaran ,
× RELATED சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினர் 11 பேர் திரிபுராவில் கைது