×

தேசிய அரசியலில் அடக்கி வாசிக்கும் அல்வா மாவட்ட மக்கள் பிரதிநிதியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கட்சி கையில் இருந்தும் கூட்டத்தை ஓட்டலில் நடத்தும் இலை கட்சியை பற்றி சொல்லேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சியில் சேலம்காரர் தரப்புக்கு சொந்தமாக கட்சி ஆபீஸ் இல்லையாம். இதனால் நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பில் கூட்டம் போடுவதில் பெரும் பின்னடைவாம். கடைசியாக தேனிக்காரரின் ஆதரவாளராக இருந்த வில்லன் நடிகர் பெயரை கொண்ட அந்த நிர்வாகி ஏற்பாட்டின் பேரில், அவருக்கு சொந்தமான இடத்தில் கட்சி அலுவலகம் இருந்தது. இரு தலைவர்களும் பிரிந்த பின், சேலத்துக்காரர் ஆதரவாளர்கள் இந்த அலுவலகத்துக்கு செல்ல முடியவில்லை.

தேனிக்காரரின் ஆதரவாளரான வில்லன் நடிகர் பெயர் கொண்ட நிர்வாகியும், ஆபீசை மூடி விட்டாராம். இப்போது கட்சியின் பொது செயலாளர் சேலத்துக்காரர் ஆதரவாளர்கள் மீட்டிங் போட்டு மகிழ்ச்சி தீர்மானம் நிறைவேற்ற கூட கட்சி ஆபீஸ் இல்லாமல் தவிக்கிறாங்களாம். ஒவ்ெவாரு முறை ஆர்ப்பாட்டம் அறிவிச்சா, கூட்டம் நடத்த ஓட்டலில் உள்ள மண்டபங்களை தான் புக்கிங் செய்ய வேண்டி இருக்காம். வாடகை, டீ, காபினு இதுக்கே ஒரு தொகை ஆகி விடுகிறதாம். கட்சி ஆட்சியில இருந்த சமயத்தில் பொறுப்பில் இருந்தவங்க செலவழிக்க தயங்கறாங்களாம். இதனால் கூட்ட ஏற்பாட்டாளர்கள் பணம் திரட்ட திணறுகிறார்களாம்.

பத்து வருடம் தொடர்ச்சியாக ஆளுங்கட்சியாக இருந்தும், சொந்தமாக ஒரு கட்சி ஆபீஸ் கூட கட்டல… இப்படி ஒரு தலைமையின் கீழ் நாம இருக்கோம் என்று சேலம்காரர் சப்போர்ட்டாளர்கள் புலம்பியபடி போறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘டெல்டா மாவட்ட இலை கட்சியை சுறுசுறுப்பாக மாற்ற சேலம்காரர் முடிவு செய்துள்ளாராமே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில சேலத்துக்காரரு- தேனிக்காரரு தனித்தனி அணியா பிரிந்துவிட்டாங்க. இதுல டெல்டா மாஜி அமைச்சர்கள் சேலத்துக்காரரு அணியில ஐக்கியமானாங்க. தேனிக்காரர் அணியில வைத்தியானவர் இருக்குறாரு. சேலத்துக்காரரு அணியில் உள்ள இலை கட்சியோட மாஜி அமைச்சர்கள் ஆரம்பத்துல சுறுசுறுப்பாக இருந்தாங்களாம். ஆனா சமீபமா அவர்கள்கிட்ட சுறுசுறுப்ப காணோம்.

இதுக்கான காரணம் அறிய சேலத்துக்காரரு அணிக்காரங்களே களமிறங்கினாங்க. இதுல தான் உண்டு, தன்னோட வேல உண்டு என இருந்துடலாம்ன்னு அந்த மாஜிக்கள் முடிவு செஞ்சது தெரிய வந்துச்சாம். கட்சியில ஆக்டிவ்வா இருந்தா பிரச்னை மேல் பிரச்னை வரும். சேர்த்து வைச்ச சொத்துமேலே கை ைவப்பாங்க. தேவையில்லாம ேகஸ், கோர்ட் என்று அலைய வேண்டும். அந்த நிலை நமக்கு வேண்டாம். கட்சி செயல்பாட்டில் அமைதி காப்பது என்று முடிவு செய்த தகவல் சேலம்காரர் காதுக்கு வந்துள்ளதாம். இதனால சீக்கிரத்துல டெல்டா மாவட்டத்துல கட்சி அளவில அதிரடி இருந்தாலும் ஆச்சரியமில்லையாம்.

பயந்து ஒதுங்குபவர்களை கட்சியில் டம்மியாக்கி புதியவர்களுக்கு கட்சியில் புது பதவி கொடுத்து ஆக்டிவ்வாக கட்சியை மாவட்டத்தில் வைத்திருக்க சேலம்காரர் முடிவு செய்துள்ளாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ கோவை மாநகராட்சி ஆபிசுல காசே தான் கடவுளாமே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், லைசென்ஸ் பில்டிங் சர்வேயர்கள் மற்றும் பொதுமக்கள் பட்டா மாறுதல், நிலம் அளவீடு, சர்வே செய்வது, இடத்தை உட்பிரிவு செய்வது, போன்றவற்றிற்கு ஆன்லைன் மூலமாக சர்வே துறையில் விண்ணப்பித்து, அது தலைமை சர்வேயர், மற்றும் தாசில்தார் வரையிலும் சென்று அப்ரூவல் வழங்குவது வழக்கம்.

ஆனால், இச்சேவையை பெற, பொதுமக்கள் இன்று போய்… நாளை வாங்க.. என்று திருப்பி அனுப்புறாங்களாம் அதிகாரிங்க. விசாரிச்சத்துல எல்லாம் கரன்சி தான் காரணமாம். குறிப்பாக, கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் பணி புரியும் மூன்றெழுத்து பெயர் கொண்ட தலைமை சர்வேயர் மிகவும் பண விஷயத்தில் கொடூரமாக நடந்து கொள்கிறாராம். இவர், விண்ணப்பதாரர்களிடம், ஒரு கையில் கரன்சி மற்றொரு கையில் அப்ரூவல் என்றுதான் பேசுகிறாராம்… கரன்சி இல்லாதவர்களிடம் ஐயா பிசியோ பிசி என்று பதில்தான் வருதாம். பட்டா மாறுதலுக்கு சென்றாலும் சரி, இடம் உட்பிரிவுக்கு சென்றாலும் சரி, கரன்சி இல்லையேல் கோப்புகள் நகர்வது இல்லை.

குறைந்தபட்சம் ரூ1,000, அதிகபட்சம் ரூ30,000 என டார்கெட் நிர்ணயித்துள்ளாராம். இப்படி, மாதம் ரூ.7 லட்சம் வரை அள்ளுகிறாராம். மேலதிகாரிக்கு, சிறு எலும்பு துண்டு போட்டுவிட்டு, மீதியை அமுக்கிவிடுகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அல்வா தொகுதி நிர்வாகியின் நிலை ரொம்பவே கவலைக்கிடமா இருக்காமே, என்ன காரணம்…’’ விசாரித்தார் பீட்டர் மாமா. ‘‘அல்வா தொகுதியின் எம்எல்ஏ ஏதோ ஒரு காரணத்துக்காக ஆடிப் போயிருக்கிறாராம். இலை கட்சியில் இருந்த அவர் மாநில அரசியலில் கோலோச்சியவர். தான் தேசிய அரசியலுக்கு போவோம் என்று கனவிலும் நினைக்கவில்லை.

ஆனால், தேசிய கட்சியில் இணைந்த பிறகு தேசிய அரசியலில் திடீர் ஆசை வந்து விட்டது. கடந்த தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஆனாலும் அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் இலை கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்டு அல்வா தொகுதியின் எம்எல்ஏவாகி விட்டார். எனினும் ஒரு காலத்தில் மாஜி அமைச்சராக இருந்தவர், தற்போது எம்எல்ஏ பதவியுடன் திருப்தி அடையவில்லை. தேசிய அரசியலில் கால் பதிக்கும் எண்ணத்தில் அல்வா தொகுதியில் களமிறங்க திட்டம் தீட்டியுள்ளார்.

அதற்குள் அவரது மகனின் ரூ100 கோடி மோசடி சொத்து விவகாரம் பெரிதாகி பத்திரப்பதிவும் ரத்தாகி விட்டது. இந்த விவகாரத்தால் அவரது பெயர் ரொம்ப வீக்காகி விட்டதாம். தேசிய அரசியலில் குதிக்க திட்டமிட்டிருந்தவர், ரூ100 கோடி மோசடி சொத்து விவகாரத்தால் அடக்கி வாசிக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post தேசிய அரசியலில் அடக்கி வாசிக்கும் அல்வா மாவட்ட மக்கள் பிரதிநிதியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Alwa district ,Peter Uncle ,
× RELATED டெல்லிக்கு படையெடுக்க தயாராகி வரும்...