×

ஆடிப்பூர நாயகி ஆண்டாள்

திருவாடிப்பூரம் – 22.7.2023 ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் பூமிப் பிராட்டியாகிய கோதை பிறந்த ஊர், அவளை அடைய வேண்டும் என்பதற்காக பகவான் ஸ்ரீமன் நாராயணனான கோவிந்தன் வாழும் ஊர், சோதி மணி மாடம் தோன்றும் ஊர், நீதியால் நல்ல பக்தர்கள் வாழும் ஊர், நான் மறைகள் சர்வ காலமும் ஓதும் ஊர், திருமகள் உறைந்து, மனிதர்களின் சகல பாபமும் தீர்க்கும் ஊர், இப்படி ஸ்ரீவில்லிபுத்தூர் என்று வில்லிபுத்தூரின் பெருமையை ஒரு பாடல் பேசுகிறது;

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்-நீதியால்
நல்லபத்தர் வாழும்ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்

இந்த ஊரின் பெயர் வில்லிபுத்தூர் என்று எப்படி வந்தது என்கின்ற பெயர்க் காரணத்தை ஆராய வேண்டும்.

ஆண்டாள் – பெயர் பொருத்தம்

சிம்மராசியில் ஆண்டாள் அவதாரம் என்பதால், பிறப்பு முதலே வாழ்க்கையிலும் வார்த்தையிலும் ஒரு கம்பீரம் இருந்தது. ஆளுமை இருந்தது. ‘‘மனிதர்களுக்கு வாழ்க்கைப்பட்டு வாழமாட்டேன். அந்த மாதவனுக்கே வாழ்க்கைபடுவேன்’’ என்கின்ற உறுதி இருந்தது. அதனால்தான் அவள் பகவானையே ஆண்டாள். அற்புதமான தமிழை ஆண்டாள். தன்னை தேடி வரும் அன்பர்களுக்கு அருள் கொடுத்து, அவர்களையும் ஆண்டாள். எனவே, ஆண்டாள் என்கிற பெயர் அவளுக்கு மிக பொருத்தமாக அமைந்தது.

ஆண்டாள் திருமாளிகை

ஸ்ரீவில்லிபுத்தூரில், அக்காலத்தில், ஆண்டாளும் ஆண்டாளின் தகப்பனாரான பெரியாழ்வாரும் வழிபட்ட கோயில், ஆதிகோயில். அது தனியாக இருக்கிறது. புஜங்க சயனத்தில் திருமால் உலகம் உண்ட பெருவாயனாக, வட பெருங்கோயில் உடையவனாக உறைந்தருளுகிறான். இப்பொழுது, பிரதானமாக இருப்பது ஆண்டாள் கோயில் என்று சொல்லப்படும் கோயில். இந்த இரண்டு கோயில்களையும் இணைக்கும் நந்தவனத்தில்தான் ஆண்டாள் அவதாரம் நிகழ்ந்தது. இப்பொழுது உள்ள ஆண்டாள் கோயில், “நாச்சியார் திருமாளிகை’’ என்று சொல்வார்கள். கைசிக ஏகாதசியன்று ஆண்டாள், ரெங்கமன்னார் பெரியாழ்வாரோடு நாச்சியார் திருமாளிகையிலிருந்து வடபத்ரசாயி சந்நதிக்குப் புறப்படுவார்கள். அங்கே 108 போர்வைகள் போற்றப்படும். அதற்குப் பின்னே ஆஸ்தானம் திரும்புவார்கள்.

ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை

பெரியாழ்வார், ஒவ்வொருநாளும் பாமாலையோடு பூமாலையும் சமர்ப்பிப்பார். தன் கையாலேயே கட்டிய மாலையை பவித்ரமாகக் கருதி, அதை எம்பெருமானுக்குச் சூட்டுவார். ஒருநாள் அவர் கட்டிவைத்த மாலையை அவர் திருமகள், ஐந்து வயதுக்கும் குறைவான கோதை, தன் கழுத்தில் போட்டுக் கொண்டு அழகு பார்த்தாள். தனக்கு அழகாக இருக்கிறதா என்று நினைக்கவில்லை. இதை சூட்டினால் எம்பெருமானுக்கு அழகாக இருக்குமா என்று நினைத்து அவள் தனக்குத்தானே சூடிப் பார்த்துக் கொண்டு, கூடையில் வைத்துவிடுவாள். இதை ஒரு நாள் நேரில் கண்ட பெரியாழ்வார் அதிர்ந்து போனார்.

‘‘இது என்ன அபசாரம்? அவன் சூடிக்களைந்த மாலையைத் தானே நாம் பிரசாதமாகச் சூடவேண்டும். நாம் சூடிக்களைந்து கொடுத்ததை எம்பெருமானுக்குச் சூட்டுவது தகுமா?’’ என்று கோபம் கொண்டார். தன் மகள் கோதையைக் கண்டித்தார். ‘‘இனி இப்படி செய்ய கூடாது’’ என்று எச்சரித்தார். “தாமதமாகி விட்டதே” என்று அவசரம் அவசரமாக வேறு ஒரு மாலையைக் கட்டி எம்பெருமானுக்குச் சமர்ப்பித்தார். ஆனால், அவர் மனம் அமைதியடையவில்லை. மனக்குறையோடு உணவும் கொள்ளாமல்படுத்தார்.

ஆண்டாள் மாலையே வேண்டும்

ஆண்டாள், தான் தவறு செய்து விட்டோமே, தகப்பனாரின் மனது இப்படி கஷ்டப்படுகிறதே என்று நினைத்து அழுது கொண்டிருந்தாள். அன்றைய தினம் பெரியாழ்வாருடைய கனவில் வந்த எம்பெருமான், ‘‘விஷ்ணு சித்தரே, நீர் இரண்டாவதாக மிகவும் ஆசாரமாக நினைத்துக் கொண்டு கட்டி கொடுத்த மாலையை விட, ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையே நமக்கு உகந்தது. இனிமேல் ஆண்டாள் சூடிய மாலையைத் தான் நமக்கு நீர் சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று சொல்ல, ஆண்டாளின் தெய்வத் தன்மையை பெரியாழ்வார் அறிந்துகொண்டார்.

அன்று முதல் அவளுக்கு “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என்ற திருநாமம் வந்தது, இன்றைக்கும் தினந்தோறும் முதல் நாள் இரவு ஆண்டாளுக்கு சூட்டிய மாலையை, வடபத்திரசாயி என்ற பள்ளி கொண்டிருக்கும் பெருமாளுக்கு மறுநாள் காலை, முதல் மாலையாக அணிவிப்பார்கள்.

The post ஆடிப்பூர நாயகி ஆண்டாள் appeared first on Dinakaran.

Tags : Thiruvatipuram ,Srivillyputtur ,Srivillyputtur Bhumiputtur Bhoomib Pratti Gotham ,Andal ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ...