×

திருப்பத்தூரில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் 1,500 பண்ணை குட்டைகள் வெட்டிய கலெக்டருக்கு விவசாயிகள் பாராட்டு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்டத்தில் 1,500 பண்ணை குட்டைகள் வெட்டிய கலெக்டருக்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்திலிருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தேவையான அரசு சலுகைகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு,விவசாயி: திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் குறித்த புகார் அளித்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை, போலி பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர்: பத்திரப்பதிவு துறையிலிருந்து அதிகாரிகள் யார் வந்திருக்கிறார்கள் என்று கேட்டார். அப்போது அதிகாரிகள் யாரும் வரவில்லை என்று தெரிவித்தவுடன் கலெக்டர் உடனடியாக பத்திரப்பதிவு துறையிலிருந்து அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

விவசாயி: கனரக வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் அதிக அளவில் புகை வெளியேறி மாசு ஏற்படுகிறது. இதனால் காற்று மாசடைவதால் வாகன ஓட்டிகளும் அவ்வழியாக நடந்து செல்லும் பொது மக்களும், விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல் கல் குவாரிகளில் இருந்து வெளியேறும் புகை மூட்டத்தால் பாதிக்கப்படுகிறோம். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுப்பதில்லை என்று தெரிவித்தனர்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி: வாகனங்களில் புகை வெளியேருவது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிவித்ததால் விவசாயிகளுக்கும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.கலெக்டர்: விவசாயிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சமாதானப்படுத்தி இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலருக்கு தகவல் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்துகளில் ஹேர் ஆரன்கள் பயன்படுத்துவதால், இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்துகள் ஏற்படுகிறது இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கலெக்டர்: வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக ஹேர் ஆரன்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதால் மாசடைந்துள்ளது. இதனால் விவசாயம் செய்ய முடியாத சூழலும் ஏற்படுகிறது. கலெக்டர்: மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதுபோன்று ஏரி குளங்களில் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி குளம் உள்ளிட்டவைகளை தூர்வாரி அங்குள்ள சுற்றுப்பகுதி முழுவதும் பனைமரம் நட நடவடிக்கை எடுக்கப்படும் எனவே பொதுமக்களும் விவசாயிகளும் இதுபோன்ற நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குப்பைகளை கொட்ட கூடாது.

விவசாயி: கந்திலி ஊராட்சி ஒன்றியம் சூ.பள்ளிப்பட்டு பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் குறுங்காடு அமைக்க பலமுறை விவசாயிகள் முறையிட்டோம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கலெக்டர்: வனத்துறையிடம் ஒப்புதல் பெற்று விரைவில் குறுங்காடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளி சந்தை மற்றும் பல்வேறு சந்தைகளில் ஆடு மாடுகளை விவசாயிகள் விற்பனை செய்ய வந்தால் ஒரு மாட்டிற்கு ₹120 மீதம் வசூல் செய்கின்றனர். பக்கத்து மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ₹10 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர்கள் குண்டர்களை வைத்துக்கொண்டு விவசாயிகளை மிரட்டுகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர்: இதுகுறித்து ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும், கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 2012ம் ஆண்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வறட்சி மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் இருந்து எதிர்வரும் சந்ததியினருக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத சூழல் ஏற்படும் நிலையில் இருந்தது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதியதாக பொறுப்பேற்று மாவட்டத்தை வழி நடத்தும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் 1,500 பண்ணை குட்டைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் இந்த பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் பருவ மழை காலத்திற்குள் அமைத்து அதில் தண்ணீர் நிரம்பி, நிலத்தடி நீர்மட்டம் உயர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதனால், திருப்பத்தூர் வறட்சி மாவட்டத்திலிருந்து, வளர்ச்சி மாவட்டமாக மாறும். விவசாயிகளுக்கு படிக்கல்லாக செயல்பட்டு வரும் கலெக்டரை மனதார நாங்கள் பாராட்டுகிறோம் என்று கலெக்டருக்கு விவசாயிகள் சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:மனிதர்கள் நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக எடுப்பதால் பூமி 80 செமீ கிழக்கு நோக்கி சாய்ந்து விட்டதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். பூமியில் இருந்து மனிதர்களால் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 1993 மற்றும் 2010ம் ஆண்டுகளுக்கு இடையில் பூமியானது கிட்டத்தட்ட 80 சென்டிமீட்டர் கிழக்கே சாய்ந்து உள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக பூமியின் கால நிலையில் பெரிய பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஜியோ பிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆராய்ச்சி தகவலில் 1993ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை மட்டும் 2.150 ஜிகா டன் நிலத்தடி நீர் மனிதர்களால் உறிஞ்சப் பட்டு உள்ளது. நிலத்தடி நீர் குறைதல் மற்றும் கடல் மட்ட உயர்வு காரணமாக பூமியின் துருவமானது ஆண்டுக்கு 4.36 சென்டிமீட்டர் வேகத்தில் 64.16 டிகிரி கிழக்கு 06 பூமி 80 செமீ கிழக்கு நோக்கி சாய்ந்து விட்டது.

இந்தியா, அமெரிக்கா தான் காரணம் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் நோக்கி நகர்ந்தது. இந்த காலகட்டத்தில் மனிதர்கள் எடுத்த நீரின் அளவு 0.24 அங்குலம் அல்லது 25.4 மில்லி மீட்டருக்கும் அதிகமான கடல் மட்ட உயர்வுக்கு சமம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைவது பூமியின் சுழற்சியை மாற்றுவதாக 2016ம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர். ஆனால் தற்போதுவரை இந்த சுழற்சி மாற்றங்களுக்கு நிலத்தடி நீரின் குறிப்பிட்ட பங்களிப்பு ஆராயப்படவில்லை.

1993 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில், மேற்கு வட அமெரிக்கா மற்றும் வட மேற்கு இந்தியாவில், மத்திய அட்சரேகைகளில் அதிகளவு நீர் மறுபகிர்வு செய்யப்பட்ட தாக ஆராய்ச்சியாளர்கள் பூமியின் சுழற்சி பெரிதும் மாறியுள்ளதாகவும். இதன் மூலம் பூமியின் பல்வேறு பகுதியில் கால நிலையில் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதற்கு நிலத்தடி நீர் மட்டம் குறைவு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்த முழுமை யான தரவுகள் இல்லை எனவும் ஆராச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

நிலத்தடி நீர்மட்டம் குறைவதை தடுக்க பல்வேறு நாடுகள் பல திட்டங்களை தீட்டுவதன் மூலம் பூமியின் சுழற்சி மாற்றத்தை மாற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். பூமியின் சுழற்சி துருவம் மாறிவருவதால் விரைவில் பருவநிலையில் மாற்றங்கள் உலக நாடுகள் சந்திக்க வேண்டி வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் இதனை தடுக்க தற்போது மாவட்டத்தில் 1500 பண்ணை குட்டைகள் அமைத்து எதிர்வரும் சந்ததியினருக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், வேளாண் இணை இயக்குனர் பாலா, ஊராட்சிகளின் இணை இயக்குனர் விஜயகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திருப்பத்தூரில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் 1,500 பண்ணை குட்டைகள் வெட்டிய கலெக்டருக்கு விவசாயிகள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : reduction ,Thirupattur ,Tirupattur ,Tiruppattur ,Farmers Deferment Meeting ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை 9...