×

குப்பை கிடங்கில் 2வது நாளாக தொடரும் புகை மூட்டம் ராமையன்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல்

*2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நெல்லை : நெல்லை ராமையன்பட்டி மாநகராட்சி குப்பைக்கிடங்கில் பற்றி எரியும் தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்து வரும் நிலையில், 2வது நாளாக நேற்றும் சுற்றுவட்டாரங்களில் புகைமூட்டம் காணப்பட்டது. இதை கண்டித்து நேற்று மாலை நெல்லை-சங்கரன்கோவில் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம், ராமையன்பட்டியில் 150 ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. இதில் 32.5 ஏக்கரில் மாநகராட்சி குப்பைக்கிடங்கு இயங்கி வருகிறது. மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் அகற்றப்படும் 100 டன் குப்பைகள் தினமும் அங்கு கொட்டப்பட்டு வந்தன. ஆடி மாத காற்றில் ஆண்டுதோறும் குப்பைக்கிடங்கு தீப்பிடித்து எரிவது வழக்கம்.

இந்தாண்டு நேற்று முன்தினம் மாலை குப்பைக்கிடங்கில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்ததால் சுற்றுவட்டார மக்கள் பரிதவித்தனர். மேலும் சங்கரன்கோவில் சாலையில் வாகன போக்குவரத்தும் பாதித்தது.நெல்லை மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையில் உதவி மாவட்ட அலுவலர் வெட்டும்பெருமாள், பாளை தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பாளை, பேட்டை, கங்கைகொண்டான் உள்பட 4 தீயணைப்பு வாகனங்களும் முகாமிட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து காற்று வீசுவதால் 2வது நாளாக நேற்று குப்பைக்கிடங்கில் தீப்பற்றி எரிகிறது. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சியடித்தும், குப்பைகளை கிளரி மணல் பரப்பியும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் அதிகளவு புகைமூட்டம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கண் எரிச்சல், மூச்சு திணறலால் திண்டாடி வருகின்றனர். புகைமூட்டத்தைக் கட்டுப்படுத்த குப்பைகளின் மேல் மணல் தூவும் பணியும், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை 3.30 மணிக்கு ராமையன்பட்டி, சிவாஜிநகர், வேளாங்கண்ணி நகர் சுற்றுவட்டார மக்கள் நெல்லை- சங்கரன்கோவில் சாலையில் திரண்டு திடீர் மறியலில் ஈடுபட்டனர். ராமையன்பட்டி பஞ்சாயத்து தலைவர் டேவிட், துணைத்தலைவர் செல்வக்குமார், மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், பாளை ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமார் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளோடு, சுற்றுவட்டார மக்களும் சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் நெல்லை- சங்கரன்கோவில் சாலையில் பஸ்கள் ஸ்தம்பித்து நின்றன.

நெல்லை மாவட்ட ஏஎஸ்பி உதயகுமார், மானூர் இன்ஸ்பெக்டர் சபாபதி, நெல்லை தாசில்தார் வைகுண்டம், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். புகைமூட்டம் அதிகமாக இருந்ததால், அதிகாரிகளால் பொதுமக்களிடம் பேச முடியவில்லை. இதையடுத்து சங்கரன்கோவிலில் இருந்து வரும் பஸ்கள் வேப்பங்குளம், சிதம்பரநகர், மதுரை ரோடு வழியாக நெல்லைக்கு திருப்பிவிடப்பட்டது. நெல்லையில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் பஸ்கள் தச்சநல்லூர் சந்திமறித்தஅம்மன் கோயிலில் இருந்து மதுரை ரோட்டில் சென்றன. இதனால் சுமார் 2 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொதுமக்கள் கூறுகையில், ‘‘ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ராமையன்பட்டி குப்பைக்கிடங்கு தீப்பிடித்து எரிகிறது. அப்போது குறைந்தது 4நாட்கள் வீடுகளில் இருக்க முடிவதில்லை. குப்பைகளாலும், புகைமூட்டத்தாலும் எங்களுக்கு சுவாச நோய்கள் வருகின்றன. எனவே மாநகராட்சி குப்பைகளை இங்கிருந்து உடனடியாக அகற்றிட வேண்டும்’’ என்றனர். பொதுமக்கள் போராட்டம் நேற்று இரவு வரை நீடித்தது.

The post குப்பை கிடங்கில் 2வது நாளாக தொடரும் புகை மூட்டம் ராமையன்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Ramyanpatti ,Ramayanpatti Corporation ,Smoking ,Ramayanpti Civilians ,Dinakaran ,
× RELATED சென்னையில் புகைமூட்டம்: விமானசேவை பாதிப்பு