×

ஒடிசா ரயில் விபத்து குறித்து மாநிலங்களவையில் எம்.பி ஜான் பிரிட்டாஸ் கேள்வி… முதன் முறையாக ரயில்வே அமைச்சகம் அறிக்கை வெளியீடு

டெல்லி: ஒடிசாவின் பாலசோரில் கோரமண்டல் விரைவு ரயில், சரக்கு ரயில் மற்றும் ஹவுரா விரைவு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 293 பேர் உயிரிழந்தனர்.1,000 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் பரிந்துரைத்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் இந்த ரயில் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையிலும் விசாரணை நடந்தது. அந்த விசாரணை அறிக்கையில், பாகநாகாவில் நடைபெற்ற ரயில் விபத்துக்கு மனிதத் தவறே முக்கியக் காரணமாகும். மேலும் தவறாக சிக்னல் கொடுத்ததன் விளைவாகத் தான் இந்த விபத்து நடந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருந்தது. மேலும் இந்த விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை செய்து வந்த நிலையில், மூன்று பேரை சிபிஐ கைது செய்தது.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து மாநிலங்களவையில் எம்.பி ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பினார். அதற்கு ரயில்வே அமைச்சகம் ஒடிசா ரயில் விபத்து குறித்து முதல் முறையாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் வடக்கு கூம்டி நிலையத்தில் சிக்னல் மாற்றும் கருவியில் ஏற்பட்ட கோளாறும், எலக்ட்ரிக் லிஃப்டிங் பேரியரை மாற்றுவதற்காக நடைபெற்ற சிக்னல் பணியில் ஏற்பட்ட குறைபாடுகளே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோளாறு காரணமாக தவறான பாதையில் ரயில் செல்ல பச்சை நிற சிக்னல் விழுந்ததாகவும், அதனால் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஒடிசா ரயில் விபத்து குறித்து மாநிலங்களவையில் எம்.பி ஜான் பிரிட்டாஸ் கேள்வி… முதன் முறையாக ரயில்வே அமைச்சகம் அறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Odisha ,John Britas ,Railway Ministry ,Delhi ,Howrah ,Balasoor, Odisha ,
× RELATED “ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக...