×

மராட்டிய மாநிலம் ராய்காட் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்வு..86 பேர் மாயமானதால் உறவினர்கள் சோகம்..!!

ராய்காட்: மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில், ராய்காட் மாவட்டத்தின் இர்ஷால்வாடி பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று நிலச்சரிவு ஏற்பட்டது. மலையில் இருந்து உருண்டு வேகமாக வந்த பாறைகளும், மண் குவியலும் மலைச்சரிவில் அமைந்து இருந்த குடிசைகள் மீது விழுந்தது. இந்த துயர சம்பவத்தில் சுமார் 17 வீடுகளில் தூங்கி கொண்டு இருந்த மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனர். 40-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.

தகவலறிந்து மும்பை, புனே, நவிமும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு தொடர்ந்து பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் மாலை வரை 16 பேர் மண்குவியலில் இருந்து பிணமாக மீட்கப்பட்டனர். 21 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று காலை மீண்டும் மீட்பு பணி தொடங்கியது. அப்போது மேலும் 6 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

இதனால் நிலச்சரிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்தது. பலியானவர்கள் பெண்கள், ஆண்கள் தலா 9 பேர் மற்றும் 4 குழந்தைகள் ஆவர். 86 பேர் மாயமானதால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ராய்காட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என தேசிய மீட்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதே ராய்காட் மாவட்டத்தில் உள்ள மகாட் தாலுகா தலியே கிராமத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் 87 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

The post மராட்டிய மாநிலம் ராய்காட் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்வு..86 பேர் மாயமானதால் உறவினர்கள் சோகம்..!! appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Raigat district ,Maratham ,Marathi State Raigat ,Dinakaran ,
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...