×

போதைப்பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும்

 

திருவாரூர், ஜூலை 22: ‘‘திருவாரூர் மாவட்டத்தில் போதைப்பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்,’’ என, கலெக்டர் சாரு உறுதிபட தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட பள்ளி கல்வித்துறையின் சார்பில் போதைப் பழகத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியினை திருவாரூர் புதிய ரயில் நிலையத்திலிருந்து எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன் முன்னிலையில் கலெக்டர் சாரு தொடங்கி வைத்து பேசியதாவது:
போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீயவிளைவுகளை இளைஞர்கள் முழுமையாக அறிந்து கொண்டு போதைப் பழகத்திற்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும். மேலும் குடும்பத்தினர், நண்பர்களுடன் ஒன்றிணைந்து போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் முன்நின்று செயல்பட வேண்டும். அதேபோன்று, போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிபடுத்துவதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும்.

போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிக்கு எதிரான மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் சாரு பேசினார். பேரணியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட நிலையில் புதிய ரயில் நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக திருவாரூர் நகராட்சி அலுவலகத்தை அடைந்து முடிவுற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா, திருவாரூர் நகராட்சி நியமனகுழு உறுப்பினர் பிரகாஷ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சங்கர், நகராட்சி மேலாளர் முத்துகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post போதைப்பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Tiruvarur ,Collector ,Saru ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக...