×

கடன் வாங்கி நிதி நிறுவனங்களில் முதலீடு செய்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், கடன்பெற்று ஆருத்ரா மற்றும் ஐஎப்எஸ் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்த வாலிபர், கடன் பிரச்னையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் ராஜூ (36). இவருக்கு, திருமணமாகி, 6 வயது மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். ராஜூ, பொருட்கள் டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் டெலிவரிமேனாக பணிபுரிந்து வந்தார். பின்னர், கடந்த 1 மாதமாக உஜால நீலம் மற்றும் ஆலா மார்க்கொட்டிங் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் என பலரிடம் பணம் கடனாக பெற்று ராஜூ, ஆருத்ரா மற்றும் ஐஎப்எஸ் நிதி நிறுவனங்களில் சுமார் ரூ.7 லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளார். இந்த நிதி நிறுவனங்களின் மோசடியில் பணத்தை இழந்த ராஜூவிடம், பணம் கொடுத்தவர்கள் பணத்தினை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அவர், வீட்டில் தனியாக இருந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டிலிருந்து வெளியே வராவில்லை.

இதனால், அவரின் பெரியம்மா நீலா கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, இரும்பு கம்பியில் வேட்டியை கட்டி தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்த ராஜூவை மீட்டு, இறுதி சடங்கிற்காக மாலை மரியாதை செய்து வைத்திருந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார், ராஜூவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடன் வாங்கி நிதி நிறுவனங்களில் முதலீடு செய்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Aruthra ,IFS ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...