×

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா சுயம்பு அம்மனுக்கு பாலபிஷேகம்

மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழாவில் பங்காரு அடிகளார், சுயம்பு அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 52ம் ஆண்டு ஆடிப்பூர விழா, மங்கள இசையுடன் ஆதிபராசக்தி அம்மனுக்கு, அலங்காரத்துடன் தீபாரதனை செய்து வேள்வி பூஜையுடன் கோலாகலமாக நேற்று முன்தினம் தொடங்கியது. இதனைதொடர்ந்து கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சி சித்தர்பீட வளாகத்தில் நேற்று காலை 6 மணியளவில் நடைபெற்றது.

இதில், ஆன்மிக இயக்க துணை தலைவர் கோ.ப.செந்தில்குமார் கலந்துகொண்டு, பக்தர்களுக்கு கஞ்சி கலயங்கள் வழங்கி கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் பல லட்சம் பக்தர்கள் கஞ்சி கலயங்களை கையில் சுமந்தபடி சென்று கருவறை முன்பாக ஆதிபராசக்தி அம்மனை வழிபட்டு, பின்னர் பள்ளி வளாகத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த கொப்பரை பாத்திரத்தில் ஊற்றினார். அதனை சமத்துவ கஞ்சியாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து காலை 9 மணியளவில் அன்னதான பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை ஆதிபராசக்தி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரமேஷ் தொடங்கி வைத்தார்.

மேலும், 10 மணி அளவில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வந்திருந்த பங்காரு அடிகளாருக்கு, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர். 10.15 மணியளவில் ஆதிபராசக்தி கருவறை முன்பு இருக்கும் சுயம்பு அம்மனுக்கு பங்காரு அடிகளார் பாலபிஷேகம் செய்து விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற ரயில்வே பொது மேலாளர் ஜெய்ந்த், முன்னாள் தமிழ்நாடு தேர்வாணைய தலைவர் அருள்மொழி, ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மீக இயக்க துணை தலைவர்கள் கோ.ப.அன்பழகன், வேளாண்மை கல்லூரி தாளாளர் உமாதேவி ஜெய்கணேஷ், செவிலியர் கல்லூரி தாளாளர் ஸ்ரீலேகா செந்தில்குமார், மதுமலர், அகத்தியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆடிப்பூர தினமான (சனிக்கிழமை) இன்று காலை 3மணியளவில் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாரதனை நடைபெற உள்ளது.

The post மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா சுயம்பு அம்மனுக்கு பாலபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Goddess ,Aadipura Festival ,Melmaruvathur Adiparashakti Siddhar Peedam ,Melmaruvathur ,Adiparashakti Siddhar Peetam Aadipura Festival ,Bangaru Adikalar ,Melmaruvathur Adiparasakthi Siddhar Peetham Aadipura Festival ,Balabhishekam ,
× RELATED திருமலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில்...