×

தாமரைப்பாக்கம் அணைக்கட்டு மேம்பாலத்தில் விழுந்த ஓட்டை: சீரமைக்க மக்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: தாமரைப்பாக்கம் அணைக்கட்டு மேம்பாலத்தில் விழுந்துள்ள பெரிய ஓட்டையை சீரமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கைவைத்தனர். பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் இருந்தது. இதில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தரைப்பாலம் மூழ்கி விடும். இதனால் போக்குவரத்து தடைபடும். மேலும் தாமரைப்பாக்கத்தை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 25 கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு தான் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிக்கு வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு வந்து செல்வார்கள்.

இந்நிலையில் புதியபாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கைவைத்தனர். அதன்படி கடந்த 30 வருடங்களுக்கு முன்பு அணைக்கட்டு பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக பெரியபாளையத்தில் இருந்து ஆவடி, திருநின்றவூர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கில் வாகனங்கள் செல்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி போன்ற பகுதிகளிலிருந்து ஆந்திரமாநிலத்திற்கு கனரக வாகனங்களும் வந்து செல்கிறது. மேலும் தாமரைப்பாக்கம் மற்றும் அதைச்சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்களும் இந்த பாலத்தை பயன்படுத்தி கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு சென்று வருவார்கள்.

இந்நிலையில் மிக முக்கியம் வாய்ந்த இந்த பாலத்தின் நடுவில் பெரிய அளவில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலம் விரிசல் விடும் அபாயமும் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் பாலத்தில் உள்ள ஓட்டையில் கீழே விழுகிறார்கள். எனவே சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவைத்துள்ளனர். இதுகுறித்து தாமரைப்பாக்கம் பகுதி மக்கள் கூறியதாவது: தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 30 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மேம்பாலத்தின் நடுவில் கடந்த சில மாதங்களாகவே பெரிய அளவில் ஓட்டை விழுந்துள்ளது.

இந்த ஓட்டை கடந்த சில வருடத்திற்கு முன்பு அதிமுக அரசால் பாலத்தின் அருகில் விடப்பட்ட மணல் குவாரியில் இருந்து அதிகளவு பாரத்துடன் மணல் எடுத்துச்சென்ற லாரியால் ஏற்பட்ட ஓட்டையாகும், மேலும் இந்த பாலத்தின் வழியாக ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி போன்ற பகுதிகளிலிருந்து தற்போது கனரக வாகனங்கள் செல்கிறது. அதிக பாரத்துடன் லாரிகள் செல்வதால் பாலம் வலுவிழக்கும் வாய்ப்புள்ளது. இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் பாலத்தில் உள்ள பள்ளத்தால் கீழேவிழ வேண்டிய நிலை உள்ளது. எனவே ஓட்டை விழுந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என கூறினார்.

The post தாமரைப்பாக்கம் அணைக்கட்டு மேம்பாலத்தில் விழுந்த ஓட்டை: சீரமைக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamaripakkam dam ,Oothukottai ,Thamaraipakkam dam ,Periyapalayam ,Dinakaran ,
× RELATED கடை ஊழியர் மீது சரமாரி தாக்குதல்: வாலிபர் கைது