×

நாடாளுமன்ற தேர்தல் வியூகம் திருச்சியில் பூத் அலுவலர்களுடன் முதல்வர் 26ம் தேதி கலந்துரையாடல்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி: திருச்சியில் வரும் 26ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் பூத்கமிட்டி அலுவலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாட உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் மாநிலம் முழுவதும் 5 மண்டலங்களிலும், வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி பாசறைக்கூட்டம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக டெல்டா மண்டலத்திற்கான கூட்டம் வரும் 26ம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 26ம் தேதி திருச்சி வருகிறார்.

அன்று ராம்ஜிநகர் பகுதியில் நடைபெறும் ஒருநாள் பாசறைக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். 27ம்தேதி கேர் கல்லூரியில் விவசாயிகளுக்கான ‘வேளாண் சங்கமம் 2023’ என்ற தலைப்பில் மாநில அளவிலான வேளாண் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை முதல்வர் தொடங்கி வைக்கிறார். இதையடுத்து விழா மேடை மற்றும் பந்தல்கள் அமைக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு, கேர் கல்லூரியில் வேளாண் கண்காட்சி நடைபெற உள்ள இடத்தையும் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி: வரும் 26ம்தேதி காலை 11 மணிக்கு சென்னையிலிருந்து முதல்வர் விமான மூலம் திருச்சிக்கு வருகிறார். நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்க மூத்த வழக்கறிஞர்கள் முதல்வரை நேரில் சந்திக்கின்றனர். மாலை 4 மணிக்கு 15 மாவட்டங்களை சேர்ந்த இரண்டாம் நிலை தேர்தல் பூத்கமிட்டி அலுவலர்களுடன் கலந்துரையாடி இறுதியாக உரையாற்றுகிறார். 27ம் தேதி காலை 9 மணிக்கு வேளாண் கண்காட்சியை முதல்வர் தொடங்கி வைக்கிறார். கண்காட்சியில் இன்றைய நவீன காலத்தில் எப்படி விவசாய உபகரணங்களை பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துவது என்பது குறித்த பல்வேறு உபகரணங்கள் இடம் பெறுகின்றன. இதுவரை தனியார் நிறுவனங்கள் மட்டுமே நடத்திய கண்காட்சி முதல் முறையாக தமிழக அரசு முன் நின்று இந்த விவசாய உபகரணங்கள் கண்காட்சியை நடத்துகிறது. முதல்வர் விவசாயிகளுடன் கலந்துரையாடி சிறப்புரையாற்றுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

The post நாடாளுமன்ற தேர்தல் வியூகம் திருச்சியில் பூத் அலுவலர்களுடன் முதல்வர் 26ம் தேதி கலந்துரையாடல்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Booth ,Trichy ,Minister ,K. N.N. Nehru ,26th Parliamentary Election ,Chief Minister ,Boudhi ,G.K. Stalin ,
× RELATED திருச்சி ரயில் நிலையத்தில் நடனமாடி...