×

ஓய்வூதியதாரர்கள் வீட்டிற்கே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்: மாநில அரசும், அஞ்சல் துறையும் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: ஓய்வூதியதாரர்கள் வீட்டிற்கே சென்று டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் வகையில் மாநில அரசு மற்றும் அஞ்சல் துறையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அஞ்சல் துறை, மாநில அரசின் ஓய்வூதியதாரர்களின் வீட்டிற்கே சென்று இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலமாக டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் சேவையை தபால்காரர் மூலம் வழங்கி வருகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாநில அரசு, அஞ்சல் துறையின் கீழ் உள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கு இடையே கையெழுத்தாகியது.

இதுகுறித்து அஞ்சல் துறை அதிகாரி கூறியதாவது: மாநில அரசின் ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை, ஜூலை 1ம் தேதி முதல் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம், அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே கைவிரல் ரேகையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகையை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.

சென்னை நகர மண்டலத்தில் 2191 நகர்ப்புற மற்றும் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்கள் மூலம் 2500க்கும் மேற்பட்ட தபால்காரர்கள் மற்றும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள், ஆதார் மொபைல் எண்ணை புதுப்பித்தல், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய ஆதார் பதிவு செய்தல், ஆதார் சார்ந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்தல் போன்ற சேவைகளை அவர்களது வீட்டிற்கே சென்று வழங்கி வருகின்றனர். சென்னை நகர மண்டலம், கடந்த 2022-23ம் நிதியாண்டில், சுமார் 1,16,137 ஒன்றிய, மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு, தபால்காரர்கள் மூலம் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க வழிவகை செய்துள்ளது. மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் இதர தகுதி வாய்ந்த ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்த படியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post ஓய்வூதியதாரர்கள் வீட்டிற்கே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்: மாநில அரசும், அஞ்சல் துறையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : State Government ,Department of Posts ,Chennai ,government ,
× RELATED புயலுக்கு கேட்ட நிவாரணம்...