×

மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை கண்டித்து சென்னை சாஸ்திரிபவனை மார்க்சிஸ்ட் முற்றுகை: ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம்

சென்னை: மணிப்பூர் கலவரம் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. கலவரத்தின் போது, போராட்டக்காரர்கள் பழங்குடியின 2 பெண்களை நிர்வாணப்படுத்தி அவர்களை ஊர்வலமாக அழைத்து சென்று தாக்கும் சம்பவத்தின் வீடியோ 2 நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பெண்களை கொடுமைப்படுத்தியவர்கள் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க கோரி நாடு முழுவதிலும் தன்னெழுச்சியாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகமான சாஸ்திரிபவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதைதொடர்ந்து சாஸ்திரிபவன் முன்பு போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பிறகு திட்டமிட்டப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருவேட்டை, முரளி, தனலட்சுமி, ஆறுமுகம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் சாஸ்திரிபவன் அருகே நேற்று காலை கூடினர். பின்னர் திட்டமிட்டப்படி அனைவரும் கையில் ஒன்றிய அரசுக்கு எதிரான பதாகைகள் மற்றும் கோஷங்கள் எழுப்பியபடி சாஸ்திரி பவனை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மணிப்பூர் கலவரத்திற்கு காரணமாக அனைவரையும் 24 மணி நேரத்திற்குள் கைது செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக நடந்து வரும் கலவரத்திற்கு இதுவரை நடவடிக்கை எடுக்காத மணிப்பூர் அரசை கலைத்துவிட்டு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. அப்போது போலீசார், போராட்டக்காரர்களிடம் கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டதை தொடர்ந்து, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வா தலைமையில் வந்த போராட்டக்காரர்கள் சிறிது நேரத்தில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் நுங்கம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை கண்டித்து சென்னை சாஸ்திரிபவனை மார்க்சிஸ்ட் முற்றுகை: ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Shastri Bhavan ,Manipur ,Union Govt ,riots ,Union Government ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...