×

மணிப்பூரில் நிர்வாண ஊர்வலம் 2 குற்றவாளிகளின் வீடுகளுக்கு தீ வைப்பு: ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டு ஆத்திரம்

இம்பால்: மணிப்பூரில் நிர்வாண ஊர்வலம் நடத்திய 2 குற்றவாளிகள் வீட்டிற்கு பெண்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு தீ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மணிப்பூரில் கடந்த மே 4ம் தேதி குக்கி இன பெண்களை நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக இளைஞர்கள் அழைத்துச் சென்றனர். அவர்களை வயல்வெளியில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். தங்களை விட்டு விடும்படி அந்த இளைஞர்களிடம் பழங்குடியின பெண்கள் கெஞ்சினர். இச்சம்பவத்தை தடுக்க முயன்ற ஒரு பழங்குடியின இளைஞரையும் அவர்கள் கொலைசெய்தனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான குய்ரம் ஹெராதாஸ்(32) உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கிட்டத்தட்ட 77 நாட்களுக்கு பின்னர், இந்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளியின் வீட்டை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான பெண்கள், அந்த வீட்டை தீ வைத்து எரித்தது. இச்சம்பவம் தவுபல் மாவட்டத்தில் உள்ள பேச்சி அவாங்க் பகுதியில் நடந்தது. இது மேலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே நிர்வாண ஊர்வலத்தில் கைது செய்யப்படாத மற்றொரு குற்றவாளியின் வீட்டை நேற்று பிற்பகல் பொதுமக்கள் உடைத்து தீ வைத்து எரித்தனர். தவுபல் மாவட்டம் வாங்ஜிங் கிராமத்தில் அந்த வீடு அமைந்துள்ளது. அவரை போலீசார் தேடுவதை அறிந்ததும் தப்பி ஓடிவிட்டார். இதையறிந்த கிராம மக்கள் மற்றும் பெண்கள் அங்கு திரண்டு அவரது வீட்டை அடித்து உடைத்து, தீ வைத்து எரித்தனர். இதனால் மணிப்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே தற்போதைய நெருக்கடியிலிருந்து மணிப்பூரை மீட்டு கொண்டுவர அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்தார். எப்ஐஆர் சொல்வது என்ன?: மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக அணிவகுத்து செல்வதற்கு முன் கலவரக் கும்பல் பொதுமக்களைக் கொன்று வீடுகளை எரித்ததாக எப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சைகுல் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக ஜூன் 21ம் தேதி தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், மே 4ம் தேதி, இரு பெண்களை நிர்வாணப்படுத்தும் முன்பு, கும்பலிடம் இருந்து தனது சகோதரியை பாதுகாக்க முயன்றவர் கொல்லப்பட்டார். ஏகே ரைபிள்கள், எஸ்எல்ஆர், இன்சாஸ் மற்றும் .303 ரைபிள்கள் போன்ற அதிநவீன ஆயுதங்களை ஏந்திய சுமார் 900-1000 பேர், சைகுல் காவல் நிலையத்திலிருந்து தெற்கே 68 கிமீ தொலைவில் உள்ள எங்கள் கிராமத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தனர். கலவரக் கும்பல் அனைத்து வீடுகளையும் சேதப்படுத்தியது. அசையும் சொத்துக்கள் அனைத்தையும் சூறையாடிய பின்னர் அவற்றை எரித்தது. வீடுகளில் இருந்த பணம், மின்னணு பொருட்கள், உணவு தானியங்கள், கால்நடைகளையும் பறித்துச்சென்றது என்று எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post மணிப்பூரில் நிர்வாண ஊர்வலம் 2 குற்றவாளிகளின் வீடுகளுக்கு தீ வைப்பு: ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டு ஆத்திரம் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,
× RELATED வெளிமணிப்பூரில் 81.46% வாக்குப்பதிவு