×
Saravana Stores

36 கிமீ தூர இங்கிலீஷ் கால்வாயை நீச்சலடித்து கடந்து தேனி மாணவர் சாதனை

தேனி: தேனியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர், 36 கிமீ தூர இங்கிலீஷ் கால்வாயை நீச்சலடித்து கடந்து உலக சாதனை படைத்துள்ளார். தேனியை சேர்ந்தவர் சினேகன். 10ம் வகுப்பு மாணவர். இவர் கடந்த 2015 முதல் பயிற்சியாளர் விஜயகுமார் என்பவரிடம் நீச்சல் பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையில் சினேகன் உள்ளிட்ட 6 பேர் குழுவினர், இங்கிலீஸ் கால்வாயை கடந்து சாதனை புரிய கடந்த 18ம் தேதி அதிகாலை 3 மணிக்கு இங்கிலாந்து நாட்டில் டோவர் நகரில் உள்ள டோவர் ஹோ கடற்கரைக்கு சென்றனர்.

பின்னர் 36 கிமீ தூரமுள்ள இங்கிலீஷ் கால்வாயில் நீச்சலடித்து, பிரான்ஸ் நாட்டின் ஹாலீஸ் கடற்கரைக்கு சென்றனர். பின்னர் அங்கு கரையேறாமல், மீண்டும் நீந்தியபடி 19ம் தேதி காலை 10.30 மணிக்கு இங்கிலாந்து வந்தடைந்தனர். இதற்கு முன்பு இங்கிலாந்தில் இருந்து பிரான்சுக்கு இங்கிலீஸ் கால்வாயில் நீந்தி சென்றவர்கள், பிரான்ஸ் கடற்கரையில் கரையேறி விடுவார்கள். பின்னர் அங்கிருந்து படகில் திரும்பி விடுவார்கள். ஆனால் விஜயகுமார் தலைமையிலான குழுவினர், இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் சென்று, பின்னர் அங்கிருந்து மீண்டும் இடைவிடாமல் நீந்தியபடி இங்கிலாந்து திரும்பியுள்ளனர்.

மொத்தம் 72 கிமீ தூரம் நீந்தி, சாதனை படைத்த இந்தியாவின் முதல் அணி என்ற பெருமையை இந்த அணி பெற்றுள்ளது. இது குறித்து பயிற்சியாளர் விஜயகுமார் கூறுகையில், ‘‘இந்த கடல் பகுதியில் அதிக நீரோட்டம் உள்ளது. 14 முதல் 15 டிகிரி சீதோஷ்ண நிலை நிலவுகிறது. மேலும் இப்பகுதியில் ஜெல்லி மீன்கள் அதிகளவில் உள்ளன. கடல் நாய்கள், சுறா மீன்களும் உள்ளன. தமிழகத்திலிருந்து இதற்கு முன் குற்றாலீஸ்வரன் நீந்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்குப் பின் சினேகன் ஆங்கில கால்வாயை நீந்தி கடந்துள்ளார். குற்றாலீஸ்வரனுக்கு அடுத்து ஆங்கில கால்வாயை கடந்த இரண்டாவது தமிழர் சினேகன் என்பது குறிப்பிடத்தக்கது’’ என்றார். உலக சாதனை விருது வழங்கும் குளோபல் அவார்டு என்ற அமைப்பு உலக சாதனை படைத்த குழுவின் பயிற்சியாளர் விஜயகுமார், சினேகன் உள்ளிட்ட அணியினருக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.

The post 36 கிமீ தூர இங்கிலீஷ் கால்வாயை நீச்சலடித்து கடந்து தேனி மாணவர் சாதனை appeared first on Dinakaran.

Tags : English Channel ,Theni ,
× RELATED தேனி மாவட்டத்தில் தொடர் மழையால்...