×

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேருக்கும் 11 நாள் போலீஸ் காவல்: மணிப்பூர் காவல்துறை

இம்பால்: மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் ரீதியில் துன்புறுத்திய வழக்கில் கைதான 4 பேருக்கு 11 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் பழங்குடியினத்தவர்களுக்கும், மைத்தேயி இனத்தவர்களுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் வன்முறை வெடித்தது. பல கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தினரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டனர். தொடர் வன்முறை சம்பவங்களில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர். கடந்த மே 4ம் தேதி, மணிப்பூரின் சேனாபதி கிராமத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த சிலரை மைத்தேயி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கடத்திச் சென்றனர்.

அவர்களில் இரு பெண்களை ஆடையின்றி, மானபங்கம் செய்தபடி கிராமத்துக்குள் ஊர்வலமாக இளைஞர்கள் அழைத்துச் சென்றனர். அதில் ஒரு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். தங்களை விட்டு விடும்படி அந்த இளைஞர்களிடம் பழங்குடியின பெண்கள் கெஞ்சினர். இச்சம்பவத்தை தடுக்க முயன்ற ஒரு பழங்குடியின இளைஞரையும் அவர்கள் கொலை செய்தனர். அந்த வீடியோ காட்சிகள் நேற்று முன்தினம் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான குய்ரம் ஹெராதாஸ் (32) உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிட்டத்தட்ட 77 நாட்களுக்கு பின்னர், இந்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேருக்கும் 11 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

The post பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேருக்கும் 11 நாள் போலீஸ் காவல்: மணிப்பூர் காவல்துறை appeared first on Dinakaran.

Tags : Manipur Police ,Imbal ,Manipur ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் கைது