×

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் `ஆடித்தபசு’ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

சங்கரன்கோவில்: தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில் ஆடித்தபசு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. வரும் 29ம்தேதி அம்பாள் தேரோட்டமும், 31ம்தேதி ஆடித்தபசு காட்சியும் நடைபெறுகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் நாளில் தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசு திருவிழா மிக முக்கிய திருவிழா ஆகும். இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று (21ம்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடந்தது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோமதி அம்பாள் சிவிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தொடர்ந்து காலை 6.16 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. கொடியேற்ற பூஜைகளை ரவிசங்கர் தலைமையிலான பட்டர்கள் செய்திருந்தனர்.
தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை கோமதி அம்மன் பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தினமும் இரவு மண்டகப்படியில் இருந்து வெவ்வேறு வாகனங்களில் கோமதி அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் 9ம் திருநாளான ஜூலை 29ம்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு 11ம் திருநாளான ஜூலை 31ம்தேதி (திங்கள்) தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது.

அன்று காலை 9 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்கார பரிவட்டம் சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் தங்கச்சப்பரத்தில் தவக்கோலத்தில் கோமதி அம்மன் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டகப்படியில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு மேல் சிவபெருமான் அரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் சங்கர நாராயணசுவாமியாக ரிஷப வாகனத்தில் கோமதி அம்மனுக்கு தபசு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், இரவு 12.05 மணிக்கு மேல் சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் கோமதி அம்மனுக்கு காட்சி கொடுக்கும் 2ம்தபசு காட்சியும் நடைபெறும். கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் `ஆடித்தபசு’ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : ``Adithapasu'' festival ,South Tamil Nadu ,Shankaran ,Sankarankoil ,Sankaranarayanaswamy ,Aadithapasu festival ,Sankaran temple ,
× RELATED தென் தமிழகம், வட தமிழக மேற்கு...