×

நாற்று நடவு பணியில் ஈடுபட்டபோது மண் சரிந்து ஆழ்துளை கிணற்று பள்ளத்தில் புதைந்த பெண் தொழிலாளி

* 4 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்பு

* தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பு

திருமலை : தெலங்கானா மாநிலத்தில் நாற்று நடும் பணியில் ஈடுபட்டபோது மண் சரிந்து ஆழ்துளை கிணற்று பள்ளத்தில் புதைந்த பெண் தொழிலாளியை 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் பத்திரமாக மீட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டம், சோலிபேட் கிராமத்தை சேர்ந்தவர் பத்மா (50), விவசாய கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கோலிபள்ளி பகுதியை சேர்ந்த வெங்கட் என்பவரின் விவசாய நிலத்தில் நாற்று நடும் பணியில் சக தொழிலாளர்களுடன் ஈடுபட்டார்.

அப்போது அந்த நிலத்தின் ஓரிடத்தில் மண் சரிந்து திடீரென ​​பத்மாவின் கால் உள்ளே இழுத்தது. சிறிது நேரத்தில் இடுப்பளவு சேற்றில் புதைந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சகபெண் தொழிலாளர்கள் கூச்சலிட்டனர். பின்னர் தகவலறிந்த மற்ற தொழிலாளர்கள் மற்றும் நிலத்தின் உரிமையாளர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் எஸ்.ஐ ஸ்ரீநிவாஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் 4 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்மாவை பத்திரமாக மீட்டனர்.

இதனை அடுத்து அவரை புவனகிரி மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், விவசாயி வெங்கட் தனது நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டியுள்ளார். ஆனால் அதில் தண்ணீர் வராததால் கிணற்றை அப்படியே மண்ணை கொட்டி மூடிவிட்டு விவசாய நிலமாக சீரமைத்து உழவு செய்துள்ளார்.

தற்போது அந்த இடத்தில் விவசாய பணியில் ஈடுபட்டது போது ஆழ்துளை கிணற்றின் மண் சரிந்து நேற்று முன்தினம் நடவு பணியின்போது பத்மாவின் கால் சிக்கி பின்னர் உள்ளே இழுத்துச்சென்றது தெரியவந்தது.மேலும், இதுகுறித்து போலீசார் மேல்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாய நிலத்தில் நடவு பணிமேற்கொள்ளும் போது மண் சரிந்து பெண் தொழிலாளி மண்ணில் புதைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நாற்று நடவு பணியில் ஈடுபட்டபோது மண் சரிந்து ஆழ்துளை கிணற்று பள்ளத்தில் புதைந்த பெண் தொழிலாளி appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Telangana ,
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...