×

இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்த ஆசிரியர்கள், தொண்டு அமைப்பினர்

 

கூடலூர், ஜூலை 21: பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பந்தலூர் தாலுகாவின் பிதர்காடு சுற்றுவட்ட பகுதியில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் பழங்குடியினர் மாணவர்கள் அடிக்கடி இடைநிற்றலால் கல்வியை தொடராமல் விட்டுவிடுகின்றனர். இவர்களை மீண்டும் பள்ளிகளுக்கு அனுப்ப ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பிரமுகர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு மீண்டும் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், பந்தலூர் தாலுகா பிதர்காடு பகுதியை அடுத்த பென்னை கிராமத்தில் 8ம் வகுப்பு முடித்து உயர்நிலைப்படிப்பிற்கு செல்லாமல் இருந்த பழங்குடியினர் மாணவர்களின் வீடுகளுக்கு பென்னை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் முருகேசன் நேரில் சென்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி, பழங்குடியின மாணவர்கள் கல்வி கற்க அரசு நிறைவேற்றி வரும் எண்ணற்ற திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பெறும் வகையில் விளக்கம் அளித்தார்.

இதனை அடுத்து இங்குள்ள பெற்றோர்கள் தங்களுடைய இரண்டு குழந்தைகளை 8ம் வகுப்பு முடிந்து ஒன்பதாம் வகுப்பில் சேர்க்க இசைவு தெரிவித்தனர். அதன்படி, டிவிஎஸ் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வரும் தெய்வலட்சுமி, ஐயப்பன் ஆகியோரின் உதவியோடு அந்தக் குழந்தைகள் அம்பல மூலா பகுதியில் அமைந்திருக்கக்கூடிய உண்டு உறைவிட பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளியில் சேர்ப்பதற்கு முயற்சி எடுத்து இடை நின்ற மாணவர்களை பள்ளியில் சேர்த்த தலைமையாசிரியர் முருகேசன் மற்றும் தொண்டு நிறுவன ஊழியர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

The post இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்த ஆசிரியர்கள், தொண்டு அமைப்பினர் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Bandalur ,Bidargad circle ,
× RELATED சென்னையில் இருந்து இளம்பெண் கடத்தல் தீவிர வாகன சோதனையால் பரபரப்பு