×

இந்தியாவின் கோடீஸ்வர எம்எல்ஏக்கள் பட்டியலில் டி.கே.சிவகுமாருக்கு முதலிடம்: சொத்து மதிப்பு ரூ.1413 கோடி

பெங்களூரு: இந்தியாவில் பிரபலமானவர்களின் சொத்து விவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்க வக்கீல்கள் கொண்ட குழு ஆய்வு செய்துள்ளது. இதில் இந்தியாவின் கோடீஸ்வரர் என்ற பட்டியலில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இடம்பிடித்துள்ளார். நாடு முழுவதும் 28 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள எம்எல்ஏக்களின் சொத்து விவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்க வக்கீல்கள் கொண்ட ஒரு குழு ஆய்வு செய்தது. மொத்தம் 4001 எம்எல்ஏக்களின் சொத்துக்கள் கணக்கிடப்பட்டன. இதில் நாட்டின் பணக்கார எம்எல்ஏக்களாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். முதல் 20 இடங்களில் 12 பேர் கர்நாடக எம்எல்ஏக்கள் இடம்பிடித்துள்ளனர். கர்நாடக எம்எல்ஏக்களில் 14% பேர் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள கோடீஸ்வரர்கள். இந்தியாவின் கோடீஸ்வர எம்எல்ஏக்கள் பட்டியலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏவும், துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் முதல் இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1413 கோடி. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது டி.கே.சிவகுமார் தேர்தல் ஆணையத்தில் அளித்த தகவல்படி அவரிடம் ரூ.273 கோடி அசையா சொத்துக்களும், ரூ.1140 கோடி அசையும் சொத்துக்களும் இருப்பதாக கூறியிருந்தார்.

2வது இடத்தில் கர்நாடக சுயேச்சை எம்எல்ஏவும், தொழில் அதிபருமான கே.எச்.புட்டசாமி கவுடா உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1267 கோடி. இவருக்கு ரூ.5 கோடி மட்டுமே கடன் உள்ளது. 3வது இடத்தை இளம் எம்எல்ஏவான காங்கிரசை சேர்ந்த பிரியகிருஷ்ணா பிடித்துள்ளார். 39 வயதே ஆன இவரது சொத்து மதிப்பு ரூ.1156 கோடி. இவர் நாடு முழுவதும் உள்ள எம்எல்ஏக்களில் ரூ.881 கோடிக்கு கடன் உள்ளவர்என்ற பெயரையும் பெற்றுள்ளார். இவரது தந்தை எம்.கிருஷ்ணப்பா கர்நாடகாவில் உள்ள பணக்காரர்கள் பட்டியலில் 18வது இடத்தில் உள்ளார். கோடீஸ்வர எம்எல்ஏக்கள் பட்டியலில் ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு 4வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.668 கோடி. கர்நாடகாவின் மற்றொரு எம்எல்ஏ ஜனார்த்தன ரெட்டி கோடீஸ்வரர்கள் பட்டியலில் 23வது இடத்தில் உள்ளார். கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் கோடீஸ்வரர்கள் போட்டியிட்டு எம்எல்ஏக்களாக தேர்வாகி உள்ளனர். அவர்களில் 32 பேர் 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளனர். இவர்களில் காங்கிரசை சேர்ந்த 19 பேரும், பாஜவை சேர்ந்த 9 பேரும், மஜதவை சேர்ந்த 2 பேரும் அடங்குவர்.

The post இந்தியாவின் கோடீஸ்வர எம்எல்ஏக்கள் பட்டியலில் டி.கே.சிவகுமாருக்கு முதலிடம்: சொத்து மதிப்பு ரூ.1413 கோடி appeared first on Dinakaran.

Tags : DK Sivakumar ,India ,Bengaluru ,Democratic Reforms Association ,Dinakaran ,
× RELATED ஆபாச வீடியோக்களை வெளியிட்டது யார்?.....