×

திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி: தேர்தல் அலுவலர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் நடைபெற உள்ளது என தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வருகின்ற 1.1.2024ம் ஆண்டு தகுதியேற்பு நாளாகக் கொண்டு எதிர் வரும் 5.1.2024 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிட இந்திய தேர்தல் ஆணையத்தால் பல்வேறுஅறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, 1.1.2024ஐ தகுதியேற்பு நாளாகக் கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், திருத்தணி, ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல், பூந்தமல்லி, மாதவரம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவெற்றியூர் ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்கள் நடத்தி எதிர்வரும் 5.1.2024 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளதை முன்னிட்டு, முன் திருத்த நடவடிக்கையாக குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர் விபரங்களையும் சரிபார்த்து வரும் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

அதன் தொடர் நடவடிக்கையாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தல் மற்றும் பெயர் நீக்கம் செய்தல் மற்றும் வாக்குச்சாவடிகள் பிரித்தல், இடம் மாற்றம், கட்டிடம் மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. முன்திருத்த நடவடிக்கையின் முதற்கட்ட நடவடிக்கையாக வாக்குச்சாவடிநிலை அலுவலர்கள் வீடு, வீடாக குடும்பத்தில் உள்ள வாக்காளர் விபரங்களை சரிபார்த்திட வருகை தர உள்ளனர்.

எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் இத்திட்டத்தினை சிறப்பாகவும், விரைவாகவும் மேலும், 100 சதவிகிதம் தூய்மையாகவும், துரிதமாகவும் முடித்திடும் பொருட்டு பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான தேவையான விபரங்களை அளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி: தேர்தல் அலுவலர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Albi ,Tiruvallur district ,
× RELATED மீஞ்சூர் பகுதியில் ஓடும் காரில்...