×

போரூரில் பரபரப்பு மெட்ரோ ரயில் பாதைக்கு பள்ளம் தோண்டும் இயந்திரம் சாய்ந்தது: ஒரு வழி பாதையாக மாற்றியதால் கடும் போக்குவரத்து நெரிசல்

பூந்தமல்லி: போரூரில், மெட்ரோ ரயில் பணிக்காக பள்ளம் தோண்டும் இயந்திரம் சாய்ந்தது. இதனால் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணி வடபழனியில் இருந்து பூந்தமல்லி வரை தீவிரமாக நடந்து வருகிறது. போரூரில் பில்லர்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சாலை நடுவில் சில இடங்களில் பில்லர் அமைப்பதற்காக துளை போடும் பணியும் நடந்து வருகிறது. போரூர் சிக்னலில் இருந்து வளசரவாக்கம் செல்லும் ஆற்காடு சாலையில் துளை போட்டுக் கொண்டு இருந்தபோது அந்த ராட்சத இயந்திரம் திடீரென சாலையில் ஒரு பக்கமாக சாய்ந்தது.

இதனால், ராட்சத இயந்திரம் சாலையின் நடுவில் கவிழ்ந்து விழக்கூடிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தால் ஆற்காடு சாலையில் ஒரு பக்கம் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் சாலையின் ஒரு பக்கமாக வாகனங்கள் சென்று வருமாறு தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் ஆற்காடு சாலையில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சாலையில் விழும் அபாயத்தில் உள்ள துளை போடும் இயந்திரத்தை சீர் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ராட்சத இயந்திரம் விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டது. மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் பணிகளை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

The post போரூரில் பரபரப்பு மெட்ரோ ரயில் பாதைக்கு பள்ளம் தோண்டும் இயந்திரம் சாய்ந்தது: ஒரு வழி பாதையாக மாற்றியதால் கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Borur ,POONTHAMALLI ,Dinakaran ,
× RELATED போனில் மனைவியுடன் தகராறு: கணவன் தூக்கிட்டு தற்கொலை