×

கட்டப்பட்டு 90 ஆண்டுகளான நிலையில் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய மேட்டூர் அணை செயற்கை கோள் மூலம் கண்காணிப்பு: நிலநடுக்கம் கண்டறியும் கருவியும் அமைப்பு

மேட்டூர்: மேட்டூர் அணை கட்டப்பட்டு 90 ஆண்டுகள் ஆன நிலையில், அணையின் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை செயற்கை கோள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. பருவ மழைக்காலங்களில் காவிரியில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால், தமிழ்நாட்டில் ஏற்படும் வெள்ளச் சேதத்தை தவிர்க்கவும், மழை நீரை தேக்கி பாசனத்திற்கு பயன்படுத்தவும், மேட்டூர் அணை 1934ல் ரூ.4.80 கோடியில் கட்டப்பட்டது. 12 காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்கும், 22 மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், மேட்டூர் அணை நீர் பயன்படுகிறது.

பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் காலங்களில், அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மற்றும் 7 கதவணைகள் மூலம் 460 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், சுவை மிகுந்த மீன்களும் மேட்டூர் அணையில் பிடிபடுகிறது. நீர்வளம், நிலவளம், மின்வளம், மீன்வளம் உள்ளிட்ட பல்வேறு வளங்களை, தமிழகத்திற்கு தருவதாக மேட்டூர் அணை திகழ்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க மேட்டூர் அணை கட்டப்பட்டு 90 ஆண்டுகள் ஆகின்றன. இதனால் அணையின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட ஒவ்வொரு அசைவும், செயற்கை கோள் மூலம் கண்காணிக்க, அணைகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.17 கோடி செலவில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஜிஎன்எஸ்எஸ் எனப்படும் நேவிகேசன் சேட்டிலைட் சிஸ்டம் மூலம், மேட்டூர் அணையின் ஒவ்வொரு நிகழ்வுகளும், அசைவுகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ரோவர் எனப்படும் பிரதான கருவி, அணையின் வலதுகரையில் உள்ள முல்லிங்ஸ் முனையில் பொருத்தப்பட்டுள்ளது. எதிர்முனையில், அணையின் இடது கரையில் வைக்கப்பட்டுள்ள ரோவரின் அலைகள் பிரதிபலிப்பால், அணையில் ஏதாவது அசைவுகள் உள்ளதா என்பதை கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அசைவுகள் இருப்பின், எச்சரிக்கை செய்யும். 24 மணி நேரமும் இந்த கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர, நிலநடுக்கம் கண்டறியும் கருவியும், அணையின் வலதுகரையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 5,300 அடி நீளம் கொண்ட மேட்டூர் அணை கட்டுமானத்தின் போது, 126 இடங்களில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்புகளில் விரிசல்கள் ஏற்படுகின்றனவா? என்பது குறித்து கண்காணிக்க, அணையின் மையப்பகுதியில், அணையின் இணைப்பு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அணையின் உட்புறம் 4,400 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள கசிவு நீர் வெளியேறும் பகுதியில், அப்லிப்ட் பிரசர்கேஜ் கருவி பொருத்தப்பட்டு அணையின் அடித்தளத்தில் அதிகப்படியான நீர் வெளியேறுகிறதா என்பதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அணை பகுதியில் 40 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, அத்துமீறி நுழைபவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். அணையின் 8 நுழைவாயில் பகுதிகளில், வாக்கி டாக்கி அமைக்கப்பட்டுள்ளது. தொலைபேசி, செல்போன் ஆகியவை செயல் இழந்தாலும், அவசர காலங்களில் 5 கிமீ சுற்றளவுக்கு, இந்த வாக்கி டாக்கி மூலம் தகவல் பரிமாற்றம் செய்து, வெள்ளக்காலங்களில் சிறப்பாக பணியாற்ற முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கட்டப்பட்டு 90 ஆண்டுகளான நிலையில் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய மேட்டூர் அணை செயற்கை கோள் மூலம் கண்காணிப்பு: நிலநடுக்கம் கண்டறியும் கருவியும் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Mattur Dam ,Satellite ,Matour ,Mattur ,Dam ,Mattur Dam Artificial Satellite ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையில் இருந்து காவிரி...