×

ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி கோப்பை, பொம்மன் சின்னம்: அறிமுகப்படுத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி சென்னையில் நடக்கிறது. இதையொட்டி அதற்கான கோப்பை, பொம்மன் சின்னம் ஆகியவற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி ஹாக்கிப்போட்டி ஆக.2ம் தேதி முதல் ஆக.12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக ஆசிய கோப்பை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து சென்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், நாட்டின் முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட கோப்பை நேற்று சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடந்த விழாவில் ஹாக்கி இந்தியா நிர்வாகிகள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலிடம் ஒப்படைத்தனர். அதனை மக்களுக்கு அமைச்சர் உதயநிதி பின்னர் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து ஆசிய சாம்பியன்ஷிப் தொடருக்கான ‘பொம்மன்’ சின்னத்தையும் அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘ விளையாட்டுகளை நடத்துவதில் உயர்ந்த பாரம்பரியத்தை தமிழ்நாடு கொண்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக சென்னையில் ஆக.3ம் தேதி ஹீரோ ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கிப் போட்டி நடைபெற உள்ளது. போட்டிக்கான முதல் டிக்கெட்டை பெற்றுக்கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. கோப்பையை உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்துடன் போட்டிக்கான சின்னமாக பொம்மனை அறிமுகப்படுத்துகிறோம். முதுமலை காட்டியில் ஆதரவற்ற யானைகளின் பாதுகாவலர்களாக விளங்கும் மா பொம்மன்-பெல்லி மலைவாழ் தம்பதியினரை கவுரவிக்கும் வகையிலும், யானைகளை பாதுகாப்பு குறித்து போட்டியில் பங்கேற்கும் வீரர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த பொம்மன் சின்னத்தை தேர்வு செய்துள்ளோம். மேலும் 16 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச வீரர்கள் சென்னைக்கு வர உள்ளதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் அரங்கம் சர்வதேச தரத்தில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. அதனை ஜூலை 28ம் தேதி முதல்வர் திறந்து வைக்க இருக்கிறார். தமிழக முதல்வர் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டிக்காக 18 கோடி ரூபாயை வழங்கியுள்ளார். இதற்காக செயற்கை புல்தரையை பிரான்சில் இருந்து வரவழைத்தோம். தமிழ்நாடு முதல்வருக்கு பிடித்த விளையாட்டுகளில் ஹாக்கியும் ஒன்று. சர்வதேச ஹாக்கி போட்டி நடந்த பிறகு உலக நீர் சறுக்கு விளையாட்டுப் போட்டி ஆக.14ம் தேதி முதல் ஆக.20ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. சர்வதேச அளவிலான முன்னணி ஹாக்கி அணிகள் பங்கேற்கும் ஆட்டங்களை காண சென்னை மக்கள் அதிக எண்ணிக்கையில் வரவேண்டும். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்ற வேண்டும்’ என்று பேசினார். நிகழ்ச்சியில் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ஒலிம்பியன் வி.பாஸ்கரன், முகமது ரியாஸ், ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் டர்க்கி ஆகியோர் பங்கேற்றனர்.

The post ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி கோப்பை, பொம்மன் சின்னம்: அறிமுகப்படுத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Asian Championship Hockey Cup ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Championship Hockey ,Udhayanidhi Stalin ,Bomman ,
× RELATED திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை