×

திருவாரூர் கலைஞர் கோட்டத்தை இதுவரை 41,878 பேர் பார்வை

திருவாரூர்: தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவர் மறைந்த திமுக தலைவர் கலைஞர். இவரது நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை மூலம் ரூ.12 கோடி மதிப்பில் 7,000 சதுர அடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டது. இதை கடந்த ஜூன் 20ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ராஜஸ்தான் பளிங்கு கற்களால் உருவாக்கப்பட்ட கலைஞரின் சிலை மற்றும் ஆரம்ப காலம் முதல் இறப்பு வரை அவரது வாழ்க்கை வரலாறை குறிக்கும் வகையில் புகைப்படம் மற்றும் சிலைகளுடன் கூடிய அருங்காட்சியகம், கலைஞருடன் இருப்பது போன்று புகைப்படம் எடுத்துகொள்ளும் வசதி உட்பட பல்வேறு அம்சங்களுடன் இந்த கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.20, சிறியவர்களுக்கு ரூ.10, கலைஞருடன் இருப்பது போன்று புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு ரூ.20 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இரவு கூடுதலாக ஒரு மணி நேரம் பார்வையிடலாம். இந்த கலைஞர் கோட்டத்தை பொது மக்கள் பார்வையிட மார்ச் 21ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டது. கலைஞர் கோட்டத்தை பொது மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசியல் கட்சியினர் என தினமும் ஏராளமானோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து பார்வையிட்டு செல்கின்றனர். அதன்படி கடந்த மார்ச் 21 முதல் நேற்று வரை கலைஞர் கோட்டத்தை 41,878 பேர் பார்வையிட்டுள்ளனர்.

The post திருவாரூர் கலைஞர் கோட்டத்தை இதுவரை 41,878 பேர் பார்வை appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Dazhagam ,Tamil Nadu ,Thiruvarur Artist ,
× RELATED பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பு அவசியம்