×

சென்னையில் உள்ள சொத்து ராதாபுரத்தில் பதிவு நயினார் நாகேந்திரன் மகனின் ரூ.100 கோடி போலி பத்திரப்பதிவு ரத்து: பதிவுத்துறை அதிரடி நடவடிக்கை

நெல்லை: நயினார் நாகேந்திரன் எம்எல்ஏவின் மகன் நயினார் பாலாஜி பெயரில் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை ராதாபுரம் பதிவுத் துறை அலுவலகத்தில் செய்த பதிவை அதிரடியாக பத்திரப்பதிவுத் துறை ரத்து செய்துள்ளது. அறப்போர் இயக்கம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு: மதுரையை சேர்ந்த இளையராஜா என்பவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலையத்தை மோசடி செய்த பின் நயினார் நாகேந்திரனின் மகன்  நயினார் பாலாஜியுடன் இணைந்து மிகப்பெரிய பத்திரப்பதிவு மோசடி ஒன்றை செய்ததாக அறப்போர் இயக்கம் கடந்த ஏப்ரல் மாதம் குற்றம் சாட்டியது. களமிறங்குகிறார். அதாவது, விருகம்பாக்கத்தில் உள்ள சர்ச்சைக்குரிய 1.3 ஏக்கர் நிலம் 2006 ம் ஆண்டு சரஸ்வதி என்றவருடைய பெயரில் பட்டா உள்ளது. அவர் விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சுந்தரமகாலிங்கம், வசந்தா என்றவருக்கு விற்றுள்ளார். பின்னர் சுந்தரமகாலிங்கம், வசந்தா ஆகியவர்களின் பெயரில் இந்த நிலத்திற்கான பட்டா மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு கௌரி அம்மாள் மற்றும் சிலர் இதே நிலத்தில் பாகப்பிரிவினை பத்திரத்தை பதிவு செய்கின்றனர். இதை எதிர்த்து சுந்தரமகாலிங்கம், வசந்தா சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தற்போது வரை இந்த வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.

இந்த 1.3 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிய சம்பந்தமே இல்லாத நெல்லை மாவட்டம், ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை அபகரித்த இளையராஜாவும், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி ஆகிய இருவரும் இணைந்து ஒரு மோசடி ஒப்பந்தத்தை கடந்த 2022ம் வருடம் ஜூலை 23ம் தேதி பதிவு செய்தனர். நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள உதயத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு சில சொத்துக்களையும், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சொத்துக்களையும் சேர்த்து போலியான முறையில் பத்திரபதிவை அப்போது ராதாபுரம் சார்பதிவாளராக இருந்த சரவணமாரியப்பன் பதிவு செய்ததாக அறப்போர் இயக்கத்தால் குற்றம் சாட்டப்பட்டது. அப்போது சென்னை மெட்ரோ ரயில் இந்த நிலத்தை கையகப்படுத்த உள்ளது என்பதையும் கணக்கில் அவர் கொள்ளவில்லை. மேலும் இந்த ஒப்பந்தத்தில் நயினார் பாலாஜி 46 கோடி ரூபாய்க்கு இந்த நிலத்தை வாங்க சம்மதம் என்று முன் பணமாக ரூ.2.50 கோடி கொடுத்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை மோசடி பதிவு செய்த இளையராஜா, நான் தான் இந்த நிலத்திற்கு பொது அதிகாரம் பெற்ற ஏஜன்ட் என்றும், இந்த நிலம் குலாப்தாஸ்நாராயண் தாஸ் என்பவரின் பேரன் ஜெயந்திர ஓராவுக்கு சொந்தமானது என்றும் கூறி இந்த 1.3 ஏக்கர் நிலத்தை திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அவருடைய மகன் நயினார் பாலாஜி ஆகிய இருவரும் இணைந்து மோசடியாக ஒப்பந்த பத்திரப்பதிவு செய்துள்ளனர். இதனை அறப்போர் இயக்கம் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக கூறி வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இந்நிலையில் இதுகுறித்து பதிவுத் துறை விசாரணை நடத்தியது. அப்போது நயினார் பாலாஜி மற்றும் இளையராஜா ஆகியோர் மோசடியாக பத்திரப்பதிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்த பதிவுத் துறை பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் சரவண மாரியப்பனை சில மாதங்களுக்கு முன்பு தற்காலிக பணிநீக்கம் செய்தது.

இதன் தொடர் நடவடிக்கையாக தற்போது ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதாவது சொத்து இருக்கும் சரகத்தில் அமைந்துள்ள சென்னை தென் சென்னை மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) சத்யபிரியா இந்த ஆவண பதிவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். ராதாபுரத்தில் பத்திரப்பதிவு செய்த போதிலும், அந்த சொத்து இருக்கும் இடம் விருகம்பாக்கம் சரகம் என்பதால் அந்த மாவட்ட பதிவாளரால் ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரன் தற்போது நெல்லை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். மேலும் மாநில பாஜ துணைத் தலைவராகவும், சட்டமன்ற கட்சித் தலைவராகவும் பதவி வகிக்கிறார். அவரது மகன் நயினார் பாலாஜி பாஜவின் மாநில இளைஞரணி துணைச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* மோசடி பதிவு

நெல்லை மண்டல துணை பதிவுத் துறை தலைவர் அறிக்கையின் படி, ராதாபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவண எண் 4278/2022 ரத்து செய்யப்படுவதற்கு முகாந்திரம் உள்ள ஆவணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தென் சென்னை மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 463, 470ன் படி மோசடி பத்திரப்பதிவு ஆகும். இது இந்திய பதிவுச்சட்டம் பிரிவு 22 பி (1) ன் படி மோசடியாக பதிவு செய்யயப்பட்டுள்ளதால் இந்த ஆவணத்தை ரத்து செய்து ஆணையிடப்பட்டுள்ளது என பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

The post சென்னையில் உள்ள சொத்து ராதாபுரத்தில் பதிவு நயினார் நாகேந்திரன் மகனின் ரூ.100 கோடி போலி பத்திரப்பதிவு ரத்து: பதிவுத்துறை அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Nayanar Nagendran ,Radhapura ,Chennai ,MLA ,Nayanar Balaji ,Rajapuram Registration Department ,Radhapura Property ,
× RELATED தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி பறிமுதல்...