×

மாநில அளவில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடம் கோடைவிழா நிறைவு விழாவில் கலெக்டர் பெருமிதம் நரிக்குறவர்களுக்கு எஸ்டி சான்றிதழ் வழங்குவதில்

போளூர், ஜூலை 20: நரிக்குறவர்களுக்கு எஸ்டி சான்றிதழ் வழங்குவதில் மாநில அளவில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது என்று கோடை நிறைவு விழாவில் கலெக்டர் பெருமிதம் அடைந்தார்.
ஜவ்வாதுமலை 23வது ஆண்டு கோடைவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று மாலை 4 மணிக்கு நாய்கள் சாகச கண்காட்சி நடந்தது. இதில் வேலுர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த பலவகையான நாய்கள் கலந்து கொண்டு சாகசங்கள் செய்து காண்பித்தன. அதனை தொடர்ந்து நிறைவு விழா நடந்தது. இவ்விழாவிற்கு கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். எஸ்பி கார்த்திகேயன், எம்எல்ஏக்கள் பெ.சு.தி.சரவணன், மு.பெ.கிரி, மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன் முன்னிலை வகித்தனர். ஆரணி சப் கலெக்டர் ம.தனலட்சுமி வரவேற்றார்.

சிறந்த கண்காட்சி அரங்குகளுக்கு பரிசுகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசியதாவது: கடந்த 23 ஆண்டுகளாக ஜவ்வாதுமலையில் கோடைவிழா நடந்து வந்தாலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையால் கோடைவிழா இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு மிக சிறப்பாக நடந்தது. நான் அமைச்சராக இருந்த காலத்தில் தான் ஜவ்வாதுமலையில் அடிப்படை வசதிகள் முதல் முறையாக நிறைவேற்றப்பட்டன. போளூருக்கும் ஜமுனாமரத்துருக்கும் போக்குவரத்து வசதியை மேம்படுத்த மலையடிவாரத்தில் எனது முயற்சியால் தான் மேம்பாலம் கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் மேல்நிலை தொட்டி, துணை மின்நிலையம் மினிபஸ் வசதி என படிப்படியாக பல வசதிகள் கொண்டு வரப்பட்டன.

இதையெல்லாம் மலைவாழ் மக்கள் மறந்து விடக்கூடாது. திமுக ஆட்சி எப்போதும் மலைவாழ் மக்கள் முன்னேற்றத்திற்காக உறுதுணையாக இருக்கும் என்றார். அதனை தொடர்ந்து கலெக்டர் பா.முருகேஷ் பேசியதாவது: இந்த கோடைவிழா மலைவாழ் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் விழாவாக மட்டும் இல்லாமல் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற விழாக்கள் நடத்தப்படும் போது அதனை சார்ந்து மற்ற திட்டங்களும் மக்களுக்கு தானாகவே கிடைக்கிறது.

மேலும் மலைவாழ் மக்களுக்கு வனஉரிமை சட்டத்தின் கீழ் 1300 பேருக்கு வனஉரிமை பாத்தியம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 38 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு உரிமை பாத்தியம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு பரப்பளவு தமிழகத்தில் எந்த மலைப்பகுதியிலும் கொடுக்கப்படவில்லை. இதே போல் நரிக்குறவர்களுக்கு எஸ்டி சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் நடந்தது. இதில் நம் மாவட்டத்தில் 1550 பேருக்கு எஸ்டி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் மாநில அளவில் நம் மாவட்டம் தான் முதலிடம் பிடித்துள்ளது. ₹1 கோடி செலவில் தேனீ பூங்கா கடந்தாண்டு தொடங்கப்பட்டது. ஜவ்வாதுமலையை பொறுத்தவரை நிறைய இடங்களுக்கு சாலை வசதி அமைக்க வேண்டி உள்ளது. இதற்கு வனத்துறையின் அனுமதி பெறவேண்டி உள்ளது.

கடும் முயற்சிகளுக்கு பிறகு 105 சாலைகளுக்கு தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. எனவே விரைவில் பல இடங்களுக்கு தார்சாலை வசதி செய்து தரப்படும். பரமனந்தல் முதல் அமிர்தி சாலை அகலப்படுத்தும் பணிக்கு ₹150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜவ்வாதுமலையில் குழந்தை தொழிலாளர்கள் பிற மாவட்டங்களுக்கு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். இதே போல் ஊட்டசத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகள் இங்கு அதிகம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனை மாற்ற முயற்சிக்க வேண்டும் என்றார். ஒன்றிய குழு தலைவர் எம்.ஜீவாமூர்த்தி, கோவிலுர் ஊராட்சி மன்ற தலைவர் அ.நடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நா.பிரகாஷ், கா.ரேணுகோபால், நெடுங்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பா.திருநநாவுக்கரசு, உதவி பொறியாளர் எம்.வெங்கடேசன், கூட்டுறவு செயலாளர் அ.ரமேஷ்பாபு, ஆர்.ஏழுமலை, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாவட்ட சுற்றுலா அலுவலர் பெ.அஸ்வினி நன்றி கூறினார்.

The post மாநில அளவில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடம் கோடைவிழா நிறைவு விழாவில் கலெக்டர் பெருமிதம் நரிக்குறவர்களுக்கு எஸ்டி சான்றிதழ் வழங்குவதில் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai district ,Collector ,Perumitham Narikurus ,Tiruvannamalai ,district ,Perumitham ,
× RELATED பாறை வெடித்து தலையில் விழுந்து விவசாயி பலி