×

பெரியபாளையம் ஆடி திருவிழாவையொட்டி தற்காலிக குடிநீர் தொட்டி கழிவறை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆடித்திருவிழாவையொட்டி, தற்காலிக குடிநீர் தொட்டிகள் மற்றும் கழிவறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் கோயில் ஆடித்திருவிழா, கடந்த 17ம்தேதி தொடங்கியது. இந்த திருவிழா தொடர்ந்து 14 வாரங்கள் நடைபெறுவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பஸ், வேன், ஜீப், லாரி, ஆட்டோ, மாட்டுவண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து, சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வந்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.

இதனால், இந்த ஆடித்திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை போன்ற வசதிகளை பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், செய்து தருவார்கள். ஆனால் இதுவரை தற்காலிக கழிவறைகளோ, குடிநீர் வசதிக்காக சின்டெக்ஸ் தொட்டிகளோ வைக்கவில்லை, கடந்த வருடம் ஆடித்திருவிழாவிற்கு வைக்கப்பட்ட தற்காலிக கழிவறைகள், சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் பழுதான நிலையில் அரியப்பாக்கம், ராள்ளபாடி, வடமதுரை கூட்டுச்சாலை ஆகிய பகுதிகளில் கிடக்கிறது. அதை விரைவில் சீரமைத்து பக்தர்கள் வசதிக்காக வைக்க வேண்டும், மேலும் கோயிலை சுற்றியும் கழிவறை, குடிநீர் தொட்டி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், \”ஆடித்திருவிழாவையொட்டி பெரியபாளையம் கோயிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அவர்கள் வசதிக்காக தற்காலிக கழிவறைகளை இன்னும் ஓரிரு நாட்களில் வைக்க வேண்டும். அப்போது தான் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும், தனியார் கழிவறைகளில் அதிகளவு பணம் வசூலிக்கிறார்கள். அகவே பெரியபாளையம் பிடிஒ அலுவலகம் சார்பில், பழுதாகியுள்ள கழிவறையை சீரமைத்து, பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அவ்வாறு வைக்கப்படும் கழிவறைகள் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். மேலும் அரசு இடத்தில், அரசு சார்பில் தங்கும் கொட்டகைகள் அமைக்க வேண்டும்\” என்றனர்.

The post பெரியபாளையம் ஆடி திருவிழாவையொட்டி தற்காலிக குடிநீர் தொட்டி கழிவறை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Periyapalayam Aadi festival ,Oothukottai ,Periyapalayam Bhavaniyamman Temple Aadi festival ,
× RELATED ஊத்துக்கோட்டையில் 3 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு