×

வாலாஜாபாத்தில் அடிப்படை வசதி இல்லாத சார்பதிவாளர் அலுவலகம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் அமைத்துத்தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சிகளில் மேல்நிலைப் பள்ளிகள், வங்கிகள், ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம், காவல் நிலையம், பேரூராட்சி அலுவலகம், கருவுலக அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படுகின்றன. வாலாஜாபாத் பேருந்து நிலையம் எதிரே சார்பதிவாளர் அலுவலகம் செயல்படுகிறது.

இந்த அலுவலகத்திற்கு நாள்தோறும் பத்திரப்பதிவு செய்வதற்காக நூற்றுக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நாள்தோறும் பத்திரப்பதிவு செய்வதற்கு வரும் பெண்கள், முதியவர்கள், நோயாளிகள் என பலதரப்பட்ட மக்கள் மணி கணக்கில் காத்திருக்கின்றனர். இதனால், நாள்தோறும் வந்து செல்லும் மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. குறிப்பாக கழிவறை, குடிநீர் உள்ளிட்ட எந்தவித வசதிகளும் இந்த அலுவலகத்தில் இல்லை. இதனால் இங்கு வரும் மக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

குறிப்பாக முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கழிவறையின்றி காணப்படுவதால், மாற்றுத்திறனாளிகளும் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் அருகாமையில் உள்ள பேரூராட்சி அலுவலக கழிவறைகளை சார்பதிவாளர் அலுவலகத்தில் வரும் மக்கள் பயன்படுத்துவதால், பேரூராட்சி அலுவலக ஊழியர்களும் அவர்களின் கழிவறைகளை பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகின்றன. ஒருசில நேரங்களில் கழிவறையை பயன்படுத்தும் பொதுமக்களுக்கும், பேரூராட்சி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதங்களும் நடைபெறுகின்றன.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு தெரிவித்தும், இதுவரை வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் இந்த அலுவலகத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

The post வாலாஜாபாத்தில் அடிப்படை வசதி இல்லாத சார்பதிவாளர் அலுவலகம் appeared first on Dinakaran.

Tags : Registrar's Office ,Walajabad ,Wallajabad ,Dinakaran ,
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை