×

டெல்லி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணிப்பு எதிரொலி ஓ.பன்னீர்செல்வம் கடும் அப்செட்: 3வது அணியை அமைத்து எடப்பாடி அணிக்கு அதிர்ச்சி அளிக்க திட்டம்

சென்னை: டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டத்தில் அழைக்காமல் பாஜ புறக்கணித்ததால் தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 3வது அணி அமைக்க ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் என பலரும் அதிமுகவை சொந்தம் கொண்டாடினர். இறுதியில் எடப்பாடி – ஓபிஎஸ் ஆகியோர் அதிமுக தலைமையை கைப்பற்ற முயற்சி செய்தனர். இதில் எடப்பாடி பழனிசாமிக்கு 95 சதவீதத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்ததால் அதிமுகவை கைப்பற்றியதுடன், அதிமுக பொதுச்செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் ஆணையமும் இதை அங்கீகரித்துள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் நடைபெற்ற 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்தே செயல்பட்டனர். இவர்கள் இருவரும் சேர்ந்துதான் கூட்டணியை உருவாக்கினர். அதன்படி, அதிமுக கூட்டணியில் பாஜ, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் 2019 நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட்டனர். ஆனாலும் இதில் ஒரு இடத்தில் கூட இந்த கூட்டணியால் வெற்றிபெற முடியவில்லை. தேனி தொகுதியில் மட்டும் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் அதிமுக எம்பியாக வெற்றி பெற்றார். தற்போது அந்த எம்பி பதவியும் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.

அதேபோன்று, 2021ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேமுதிக இந்த கூட்டணியில் இருந்து கழட்டி விடப்பட்டது. பாஜ தொடர்ந்து அதிமுக கூட்டணியில் போட்டியிட்டது. அப்போதும், பாஜ 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதிமுகவும் குறைவான தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் ஆட்சியை பறி கொடுத்தது. இதனால் எடப்பாடி – ஓபிஎஸ் இடையே மோதல் அதிகரித்தது. ஆனாலும், பாஜ தலைமை ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவே இருந்தது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதன்பிறகு டெல்லி பாஜவும் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்க தொடங்கியது. ஓ.பன்னீர்செல்வத்தை மெல்ல மெல்ல ஓரங்கட்டியது. அதேபோன்று தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு இல்லாததால் தேமுதிகவையும் பாஜ ஓரங்கட்டி விட்டது. டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு கூட தமிழகத்தில் பாஜவுடன் நெருக்கமாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேமுதிக கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது ஓபிஎஸ் அணியினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம், தற்போது ஒரு நாடாளுமன்ற எம்பி கூட இல்லாத எடப்பாடி பழனிசாமிக்கு பாஜ அழைப்பு கொடுத்து இந்த கூட்டத்தில் பங்கேற்க வைத்ததுடன், அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் ஓபிஎஸ் அணியினர் மேலும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதனால் 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழகத்தில் பாஜவுக்கு பாடம் கற்றுக் கொடுக்க ஓபிஎஸ் அணியினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, எடப்பாடி பழனிசாமி அணியான அதிமுகவுடன் பாஜ கூட்டணி அமைத்து தமிழகத்தில் தேர்தலில் போட்டியிட்டால் இந்த கூட்டணியை தோல்வி அடைய வைக்க ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அதன்படி, தமிழகத்தில் டி.டி.வி.தினகரன், மற்றும் பாஜவால் கழட்டிவிடப்பட்ட தேமுதிக உள்ளிட்ட கட்சியை ஒன்றிணைத்து 3வது அணி அமைக்க ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி 3வது அணி அமைத்தால், அதிமுகவின் அதிருப்தி வாக்கு தங்கள் கூட்டணிக்கு கிடைக்கும் என்று ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார். அதனால் இன்னும் ஒரு சில வாரங்களில் தமிழகத்தில் அதிமுக – பாஜ கூட்டணிக்கு எதிராக ஓபிஎஸ் தலைமையில் 3வது அணி அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இதனால் தமிழக பாஜ மற்றும் எடப்பாடி அணியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் ஒரு சில வாரங்களில் தமிழகத்தில் அதிமுக-பாஜ கூட்டணிக்கு எதிராக ஓபிஎஸ் தலைமையில் 3வது அணி அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

The post டெல்லி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணிப்பு எதிரொலி ஓ.பன்னீர்செல்வம் கடும் அப்செட்: 3வது அணியை அமைத்து எடப்பாடி அணிக்கு அதிர்ச்சி அளிக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Panneerselvam ,Edapadi ,Chennai ,Baja ,National Democratic Alliance Party ,Delhi, Tamil Nadu ,O. Bannerselvam ,Edabadi ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...