×

ஐஎப்எஸ் நிதி நிறுவனம் பல கோடி மோசடி விவகாரம் கிளை இயக்குனரின் சகோதரி வீட்டை முதலீட்டாளர்கள் திடீர் முற்றுகை: காஞ்சிபுரம் அருகே பரபரப்பு

சென்னை: பல கோடி மோசடி விவகாரத்தில், தலைமறைவாக உள்ள ஐஎப்எஸ் நிதி நிறுவன துணை இயக்குநரின் சகோதரி வீட்டை நேற்று திடீரென முதலீட்டார்கள் முற்றுகையிட்டனர். வந்தவாசி வாழைபந்தல் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த செல்வராஜ். காஞ்சிபுரம் குருவிமலை அடுத்துள்ள வளத்தோட்டம் பகுதியிலுள்ள தனது அக்கா ராதாம்மாள் என்பவரது வீட்டில் தனது சிறு வயது முதலே வசித்து வந்துள்ளார். ஒரகடம் பகுதியில் ஐஎப்எஸ் நிதி நிறுவன கிளை அலுவலகத்தை நடத்தி வந்துள்ளார். பலர் இதில் பணம் செலுத்தி வந்துள்ளனர். அதேபோல், இவரது அக்கா வீடு உள்ள வளத்தோட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள களக்காட்டூர், ஓரிக்கை, தூசி போன்ற சுற்று வட்டார கிராம பகுதிகளை சுமார் 1000க்கும் மேற்பட்டோரும் பணம் கட்டி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஓராண்டாக ஆனந்த செல்வராஜ் தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பணம் செலுத்தி பாதிக்கப்பட்டவர்கள் அவரது அக்கா ராதாம்மாளிடம் தொடர்ந்து பணம் கேட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆனந்த செல்வராஜ், அவரது அக்கா வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்ட முதலீட்டாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் ராதாம்மாளின் வீட்டுக்கு நேற்று காலைசென்று பணம் குறித்து கேட்டுள்ளனர். அப்போது, அவரது அக்கா, என்னிடம் கேட்காதீர்கள், தம்பியும் இங்கு வரவில்லை என பதிலளித்துள்ளார். இதனால், கோபம் அடைந்த அவர்கள், வீட்டின் முன்பு இருந்த சிசிடிவி கேமரா மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து உடைத்தனர். பின்னர், அந்த வீட்டை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்க கூறியதன்பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

* சொத்துகள் பறிமுதல்
அதிக வட்டி தருவதாக கூறி சுமார் ரூ.6 ஆயிரம் கோடி மோசடியில் ஈடுபட்ட, ஐஎப்எஸ் நிதி நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இதுவரை 6 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருக்கின்றனர். இதுவரை நடத்தப்பட்ட சோதனையில், ஒரு கோடியே 46 லட்சம் பணம் மற்றும் நகைகள், 16 கார்கள், 46 அசையா சொத்துகளை போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

* சொத்துகள் விற்பனை
ஐஎப்எஸ் கிளை இயக்குநராக செயல்பட்டு வந்த ஆனந்த செல்வராஜ் ஒரகடத்தை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் மற்றும் வளத்தோட்டம் கிராமத்தை சுற்றியுள்ளவர்கள் என சுமார் 5000க்கும் மேற்பட்டோரிடம் சுமார் 200 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் தற்போது தனது பினாமி பெயரில் வைத்திருக்கும் சொத்துகளை விற்று வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

The post ஐஎப்எஸ் நிதி நிறுவனம் பல கோடி மோசடி விவகாரம் கிளை இயக்குனரின் சகோதரி வீட்டை முதலீட்டாளர்கள் திடீர் முற்றுகை: காஞ்சிபுரம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : IFS ,Pandemonium ,Kanchipuram ,Chennai ,IFS Finance ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...