×

அந்தமானில் புதிய விமான முனையம் திறப்பு ஊழலை அதிகமாக்குவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

போர்ட்பிளேர்: ஊழலை அதிகரிப்பதே எதிர்க்கட்சிகளின் நோக்கமாக உள்ளது என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். அந்தமான் நிகோபரின் தலைநகரான போர்ட் பிளேரில், வீர சாவர்க்கார் விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக டெல்லியில் இருந்து திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி,‘‘நாட்டில் உள்ள ஏழைகளின் குழந்தைகளின் வளர்ச்சியில் எதிர்க்கட்சிகளுக்கு எந்த அக்கறையும் இல்லை. ஊழலை அதிகரிப்பதே அவர்களின் பொதுவான குறைந்தபட்ச நோக்கமாகும். ஜனநாயகம் என்றால் மக்கள், மக்களால், மக்களுக்காக என்பதாகும். தேசம் என்பது அவர்களுக்கு ஒன்றுமில்லை. இடதுசாரிகளும் காங்கிரசும் மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்துத் தேர்தல் வன்முறையில் தங்கள் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தினாலும் வாய்மூடி இருக்கிறார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா இன்னும் வளர்ச்சியடைந்திருக்க முடியும்.ஆனால் ஊழல் மற்றும் வம்ச அரசியலால் இந்தியா வளர்ச்சியடையவில்லை. இந்த அபாயத்திற்கு காரணமானவர்கள் இப்போது மீண்டும் தங்கள் கடைகளைத் திறந்து ஊழலில் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

* 10 விமானங்களை நிறுத்த முடியும்
2014ம் ஆண்டிலிருந்து அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை இரட்டிப்பாகியுள்ளது. வரும் ஆண்டுகளில் இன்னும் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். அவர் கூறுகையில்,’ போர்ட்பிளேர் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. இந்த புதிய முனையம் 11,000 பயணிகளைக் கையாளும். 10 விமானங்களை எந்த நேரத்திலும் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்க முடியும். கடந்த ஒன்பது ஆண்டுகளில் அந்தமான் வளர்ச்சிக்காக எங்கள் அரசு ரூ. 48,000 கோடி ஒதுக்கியது’ என்று தெரிவித்தார்.

The post அந்தமானில் புதிய விமான முனையம் திறப்பு ஊழலை அதிகமாக்குவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Andaman ,PM Modi ,Portblair ,Modi ,Port Blair ,Nicobar ,PM ,Dinakaran ,
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...